இலங்கையின் பொருளாதாரம் வெளிநாட்டு கையிருப்பு குறைந்தது எப்படி?

2019 டிசம்பர் 31 திகதியன்று கோவிட் தொற்றுநோய் பரவலின் போது ​​​​இலங்கையில் 7.6 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு கையிருப்பு இருந்தது. எனினும், இந்த பெப்ரவரி இறுதியில் 2.1 பில்லியனாக குறைந்துள்ளது.

இதனால் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 72.36 வீதம் வீழ்ச்சியடைந்து நாட்டில் பொருளாதார நெருக்கடியை உருவாக்கி மருந்து, எரிபொருள், எரிவாயு, உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

நெருக்கடி தீவிரமடைந்ததையடுத்து, இலங்கை மத்திய வங்கி கடந்த மார்ச் 7ம் திகதி டொலரின் பெறுமதியான 202 ரூபாவைத் தக்கவைத்துக் கொள்ள அனுமதித்ததுடன், இன்று பல வர்த்தக வங்கிகளின் விற்பனை பெறுமதி 275 ரூபாவாக அதிகரித்துள்ளன.

நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில், அமைச்சரவை அமைச்சர்கள், திறைசேரியின் செயலாளர் மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் ஆகியோர் அடங்கிய பொருளாதாரக் குழுவொன்றை ஜனாதிபதி நியமித்துள்ளார்.

அத்துடன், இவ்விடயம் தொடர்பில் ஆலோசனை வழங்க நிபுணர் குழுவொன்றையும் நியமித்துள்ளார். இதேவேளை, நெருக்கடிக்கு தீர்வுகாண சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதற்கான தீர்மானத்துக்கு நேற்று கூடிய அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்ததன் பின்னணியில் அமைச்சரவை அந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

நேற்று நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்தித்த தூதுவர், இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவையும் சந்தித்து பேசியிருந்தார். சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை இலங்கை எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம் என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதனிடையே, சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட அதிகாரிகளிடம் இலங்கையின் முன்மொழிவுகளை முன்வைப்பதற்காக நிதியமைச்சர் ஏப்ரல் நடுப்பகுதியில் வாஷிங்டனுக்கு செல்லவுள்ளார்.

இதேவேளை, நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதி மற்றும் 500 மில்லியன் டொலர் பெற்றோலியம் தொடர்பான உற்பத்திக் கடன் வசதி தொடர்பான உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவதற்காக இன்று இந்தியா சென்றுள்ளார்.

ஒரு பில்லியன் டொலர் கடன் வசதி அத்தியாவசிய மருந்துகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு பயன்படுத்தப்படும்.

ஒப்பந்தத்தின் கீழ் உள்ள மொத்தக் கடன்களில் 75 சதவிகிதம் இந்தியாவிலிருந்து வரும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்காக இருக்கும், மீதமுள்ள 25 சதவிகிதம் வேறு எந்த நாட்டிலிருந்தும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்காக இருக்கும்.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (16) நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதுடன், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட நிலைமைகள் தொடர்பில் விசேட அறிக்கையொன்றை வெளியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *