வாடகை செலுத்த பணமில்லாமல் பிரித்தானியாவில் தவிக்கும் ரஷ்ய கோடீஸ்வரர்!

உக்ரைன் போரினால் ரஷ்ய கோடீஸ்வரர்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பிரித்தானியாவில் உள்ள செல்சி அணி உரிமையாளர் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளார்.

உக்ரைன் போரினை அடுத்து ரஷ்யா மற்றும் விளாடிமிர் புடினுக்கு நெருக்கமான கோடீஸ்வரர்கள் மீது பிரித்தானியா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கடுமையான தடைகளை விதித்து வருகிறது.

பல ரஷ்ய கோடீஸ்வரர்கள் இந்த பொருளாதாரத் தடைகளில் சிக்கியுள்ளனர். அந்த வகையில் ரஷ்ய கோடீஸ்வரரும் செல்சி அணியின் உரிமையாளருமான ரோமன் அப்ரமோவிக் வாடகை செலுத்தவும் பணம் இல்லாமல் திண்டாடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

15 அறைகள் கொண்ட தமது லண்டன் இல்லத்திற்கு 10,000 பவுண்டுகள் வாடகை செலுத்த முடியாமல் இன்னொரு சொத்தை இழக்கும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.

ஏற்கனவே, பொருளாதாரத் தடைகள் இருப்பதால் தமது செல்சி அணியை விற்க முடியாமல் சிக்கலில் உள்ளார் ரோமன் அப்ரமோவிக். இவரது லண்டன் இல்லமானது இளவரசர் வில்லியம் மற்றும் குடும்பம் வசிக்கும் கென்சிங்டன் அரண்மனைக்கு மிக அருகாமையிலேயே அமைந்துள்ளது.

மட்டுமின்றி பிரித்தானிய இராணியாருக்கு சொந்தமான கிரவுன் எஸ்டேட்டில் அமைந்துள்ளது இவரது லண்டன் இல்லம். அந்த இடத்தை இவர் 125 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்துள்ளதால் இராணியாருக்கு ஆண்டு தோறும் 10,000 பவுண்டுகள் வாடகை கட்டணமாக ரோமன் அப்ரமோவிக் செலுத்த வேண்டும்.

தற்போதைய சூழலில் குறித்த கட்டணத்தை செலுத்த முடியாமல் போயுள்ளதால், கிரவுன் எஸ்டேட் நிர்வாகம் அவர் மீது வழக்கு தொடுக்கவும், அந்த சொத்தை பறிமுதல் செய்யவும் வாய்ப்புள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *