உக்ரைன்,ரஷ்யா பெலாரஸில் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புதல்?

உக்ரைன் நாட்டில் போர் உக்கிரமடைந்துள்ள நிலையில், இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

உக்ரைன் நாட்டின் எள்லையில் ரஷ்யா கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து ராணுவத்தைக் குவித்து வந்தது. அப்போதே மேற்குலக நாடுகள், ரஷ்யா போர் தொடுக்க உள்ளதாக தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்தன.

ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கடந்த வியாழக்கிழமை உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் முழு வீச்சில் ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது.

கடந்த வியாழக்கிழமை தொடங்கிய இந்தப் போர் 4ஆவது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது. இதனால் உக்ரைன் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். போர் காரணமாக சுமார் ஒரு லட்சம் பேர் போலாந்து எல்லையில் குவிந்துள்ளனர். இந்தப் போர் காரணமாக உக்ரைன் நாட்டில் இருந்து ஆண்கள் வெளியேறக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கு பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது,

கடந்த வெள்ளிக்கிழமை உக்ரைன் சண்டையிடுவதை நிறுத்தினால், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தாயாராக உள்ளதாக ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் அறிவித்து இருந்தார். அதேபோல ரஷ்ய அதிபர் புதினும் பேச்சுவார்த்தைக்கு எனத் தனியாக ஒரு குழுவை அமைக்கத் தாயாராக உள்ளதாக அறிவித்திருந்தார். இருப்பினும், உக்ரைன் சரணடைய மறுத்து, தொடர்ந்து போரிட்டு வந்ததால் பேச்சுவார்த்தை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்தச் சூழலில் தான் நேற்றிரவு ரஷ்யா தனது ராணுவத்திற்கு முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. அதாவது உக்ரைன் நாட்டை அனைத்து திசைகளில் இருந்தும் சுற்றி வளைத்துத் தாக்குதல் நடத்தத் தனது ராணுவத்திற்கு ரஷ்யா உத்தரவிட்டுள்ளது. இதனால் மீண்டும் போர் உக்கிரமடைந்துள்ளது. இன்று காலை முதல் உக்ரைன் நாட்டின் பல முக்கிய நகரங்களை ரஷ்ய ராணுவம் கைப்பற்றி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இந்தச் சூழலில் அண்டை நாடான பெலாரஸ் நாட்டில் வைத்து உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக உள்ளதாக ரஷ்யா அறிவித்தது. ரஷ்யா உடன் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புகொண்ட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, இருப்பினும் தங்கள் மீதான படையெடுப்பிற்கு ஏவுதளமாகப் பயன்பட்ட பெலாரஸ் நாட்டில் இருந்து பேச்சுவார்த்தை நடத்த முடியாது எனக் குறிப்பிட்டார். பெலராஸ் நாட்டிற்குப் பதிலாக வார்சா, பிராட்டிஸ்லாவா, புடாபெஸ்ட், இஸ்தான்புல், பாகு என வேறு எந்த அண்டை நாட்டின் தலைநகரானாலும் ஓகே என ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார்.

இருப்பினும், இதற்கு ரஷ்யா ஒப்புக்கொள்ளவில்லை எனத் தெரிகிறது. இந்தச் சூழலில் பெலராஸ் நாட்டில் வைத்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக் கொண்டுள்ளதாக ரஷ்ய அரசு ஊடக நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ் உட்பட நாட்டின் பல்வேறு நகரங்களிலும் தாக்குதல் உக்கிரமடைந்து வரும் நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *