திருமணம் முடிந்த கையோடு போர் களத்திற்கு சென்ற உக்ரைன் தம்பதி!

ரஷ்யா – உக்ரைன் போர் தீவிரமடைந்துவருகிறது. உக்ரைன் நாட்டிலிருந்து அதிகமான மக்கள் உறவுகளையும், உடைமைகளையும்விட்டு நடந்தே உக்ரைன் நாட்டின் எல்லைகளுக்குச் சென்றுகொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில், குண்டுச் சப்தங்களுக்கு நடுவில் ஒரு காதல் ஜோடி திருமணம் செய்துகொண்டது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுவருகிறது.
கடந்த 2019-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் கீவ் நகரில் நடைபெற்ற ஒரு போராட்டத்தில் சந்தித்த யாரினா அரீவா, சீவியடூஸ்லாவ் பர்ஸின் காதல் கொண்டுள்ளனர். அவர்களின் காதலுக்கு உறவினர்கள் சம்மதத்துடன் வரும் மே 6-ம் தேதி திருமணம் செய்துவைக்க பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, ரஷ்யாவில் உள்ள வால்டாய் மலையின் டினீப்பர் நதிக்கரையில் அமைந்துள்ள பிரபலமான உணவகத்தில் விருந்து நடக்க ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், திடீரென ஏற்பட்ட போர்ச் சூழலால் உடனே திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து உக்ரைன் தலைநகர் கீவ்-வில் உள்ள தேவாலயத்தில் திருமணம் செய்துகொண்டனர்.
திருமணத்தின்போது தேவாலயத்துக்கு வெளியே குண்டு சத்தமும், துப்பாக்கிச் சத்தமும் கேட்டுக்கொண்டே இருந்தது எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்தப் புதுமணத் தம்பதி கூறும்போது, “மிகப் பிரமாண்டமாகத் திருமணம் செய்ய முடிவு செய்திருந்தோம். ஆனால் போர்ச் சூழல் எங்களை இந்த நிலைக்கு உள்ளாக்கிவிட்டது.
நாங்கள் இருவரும் ரஷ்யாவுக்கு எதிரான போரில் ஈடுபடப் போகிறோம். இதில் எங்களுக்கு ஏதேனும் ஆகிவிட்டால்… அதற்கு முன் ஒன்றாக வேண்டும் என முடிவு செய்தோம். குண்டு சத்தங்களுக்கு மத்தியில் எங்கள் திருமணம் நடைபெற்றது அச்சமாக இருந்தது. ஆனால் எங்களுக்கு இது மகிழ்ச்சிக்குரிய நாள்” எனத் தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து திருமணம் முடிந்தவுடன் யுத்தகளத்துக்கு அவர்கள் தயாரான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது