பிறந்த குழந்தைக்கு இந்திய கிரிக்கெட் மைதானத்தின் பெயர் சூட்டிய வீரர்!

மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆல்ரவுண்டர் கார்லோஸ் பிராத்வைட், அவரின் மனைவி ஜெசிகா பெலிக்ஸ் தம்பதிக்கு நேற்று முன்தினம் பெண் குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தைக்கு ஈடன் ரோஸ் என்று பெயரிட்டுள்ளனர். இந்தப் பெயர் வைத்ததன் பின்னணியில் இந்தியத் தொடர்பு ஒன்று உள்ளது.

இறுதிப் போட்டி…

2016-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடந்தது. இதன் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து – மேற்கிந்திய தீவுகள் இரண்டும் மோதின. கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன்களை எடுத்தது. வெற்றி பெற 156 ரன்களை எடுக்கவேண்டும் என்ற நிலையில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணியில் மார்லன் சாமுவேல்ஸ் (85 ரன்கள்), டுவைன் பிராவோ (25 ரன்கள்) தவிர மற்ற முன்னணி வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் அவுட் ஆகி இருந்தனர்.

4 சிக்ஸர்கள்…

அணியை மீட்க சாமுவேல்ஸ் (85 ரன்கள்) தன்னந்தனியாக போராடி வெற்றிக்கு அருகில் கொண்டு சென்றாலும், அன்று வெற்றிக்கு உதவியது பிராத்வைட்டின் நான்கு இமாலய சிக்ஸர்கள் தான். கடைசி ஓவரில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றிபெற 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் நான்கு பந்துகளையும் சிக்ஸருக்கு விளாசினார் பிராத்வைட். மைதானத்தில் வானவேடிக்கையாக அமைந்த அந்த 4 சிக்ஸர்கள் உதவியால் இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்றது மேற்கிந்திய தீவுகள் அணி.

ஈடன் ரோஸ்…

அதன்பிறகு பிராத்வைட் பெயர் உச்சரிக்கப்பட்டாலே அந்த நான்கு சிக்ஸர்களைதான் கிரிக்கெட் ரசிகர்களை நினைவுபடுத்துவார்கள். அந்த அளவுக்கு அன்றைய ஆட்டத்துக்கு ரீச் இருந்தது. அந்த சரித்திர வெற்றியை நினைவுகூரும் விதமாகவே தனது மகளுக்கு “ஈடன் ரோஸ்” என்று பெயர் வைத்துள்ளார் பிராத்வைட். மேலும், குழந்தையின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், “ஈடன் ரோஸ் பிராத்வைட்! பெயரை நினைவில் வைத்து கொள்ளுங்கள்” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *