மத நிந்தனை குற்றச்சாட்டில் பாகிஸ்தானில் மேலும் ஒருவர் அடித்துக் கொலை!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மத நிந்தனையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் வன்முறைக் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

குர் ஆனை தீயிட்டுக் கொளுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவரை வன்முறைக் கும்பலொன்று கொலை செய்துள்ளது.

பிரார்த்தனைக் குழுவின் தலைவரின் மகன் ஒருவர், நபர் ஒருவர் குர் ஆனை தீயிட்டுக் கொளுத்தினார் என தெரிவித்ததைத் தொடர்ந்து மசூதியில் திரண்டவர்கள் இந்த வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

பொலிஸார் அந்தப் பகுதிக்குச் சென்ற வேளை மரத்தில் கட்டப்பட்ட நிலையில் சுயநினைவின்றி காணப்பட்ட நபர் ஒருவரை பார்த்துள்ளனர். பொலிஸார் மீதும் அங்கு காணப்பட்ட கும்பல் தாக்குதலை மேற்கொண்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தடிகள், கோடரிகள், இரும்புக் கம்பிகள் போன்றவற்றால் அவரைத் தாக்கி கொலை செய்தனர் என பொலிஸ் அதிகாரி முனாவர் ஹூசைன் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளார்.

கொல்லப்பட்ட 50 வயது மதிக்கத்தக்க முகமட் முஸ்டாக் மனோநிலை பாதிக்கப்பட்டவர் போல தோன்றுகின்றது என பொலிஸார் தெரிவித் துள்ளனர்.

மனநிலை பாதிக்கப்பட்டவரை அடித்துக் கொல்வதை யார் நியாயப்படுத்த முடியும் என இம்ரான்கானின் பிரதிநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

கொல்லப்பட்ட நபர் பத்து பதினைந்து வருடங்களாக மனேநிலை பாதிக்கப்பட்டவர் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பஞ்சாபின் கனேவல் மாவட்டத்தில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பிரதமர் இம்ரான்கானின் விசேட பிரதிநிதி தஹீர் அஸ்ரபி தெரிவித்துள்ளார்.

ஏனைய பலரை சட்ட அமுலாக்கல் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் 15 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்,-85பேரை தடுத்து வைத்துள்ளோம், தேடுதல்கள் இடம்பெறுகின்றன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வன்முறை கும்பலுக்கு எதிராகவும் வன்முறை இடம்பெறுவதை பார்த்துக் கொண்டிருந்த வர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் இம்ரான்கான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்டத்தினை கடுமையாக பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படும்,சட்டத்தினை தங்கள் கரங்களில் எடுப்பவர்களை நாங்கள் சகித்துக்கொள்ளப்போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *