ஹபாயா அணிந்து சென்ற ஆசிரியைக்கு தாக்குதல் வைத்தியசாலையில் அனுமதி!


ஷண்முஹா ஹபாயா விவகாரம் பாடசாலைக்குச் சென்ற ஆசிரியை பஹ்மிதா பாடசாலை வளாகத்தினுள் வைத்து கழுத்து நெரிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

திருகோணமலை ஷண்முஹா இந்து மகளிர் கல்லூரியில் இருந்து ஹபாயா அணிந்து சென்ற காரணமாக வெளியேற்றப்பட்ட ஆசிரியை பாத்திமா பஹ்மிதா அவர்கள் நீதிமன்றத்தில் இருதரப்பிற்குமிடையில் ஏற்பட்ட புரிந்துணர்வின் காரணமாக இன்று மீண்டும் பாடசாலைக்கு கடமை ஏற்க சென்ற போது பாடசாலைக்குள் கூடியிருந்த வெளியாட்கள் சிலரால் மிரட்டப்பட்டது மாத்திரமல்லாமல் கூட்டத்தில் இருந்த ஒருவரால் ஆசிரியையின் கழுத்து நெரிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

2017ல் ஹபாயா அணிந்து கற்பிக்கச் சென்ற ஆசிரியைகளை ஹபாயா அணிந்து வந்ததன் காரணமாக பாடசாலையை விட்டு ஷண்முஹா கல்லூரி நிர்வாகம் வெளியேற்றியது.மனித உரிமை ஆணைக்குழுவில் ஆசிரியைகள் செய்த முறைப்பாட்டை விசாரித்த ஆணைக்குழு ஆசிரியைகளின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக முடிவு செய்ததோடு ஆசிரியைகளை மீள ஷண்முஹாவிற்கு உடனடியாக அனுமதிக்குமாறு பிரேரித்தது.

மனித உரிமை ஆணைக்குழுவின் பரிந்துரை வெளியாகி வருடங்களாகியும் நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் அதனை நடைமுறைப்படுத்தக் கோரி பாதிக்கப்பட்ட ஆசிரியைகளில் ஒருவரான ஆசிரியை பஹ்மிதா ரமீஸ் அவர்கள் மேல் முறையீட்டு நீதி மன்றத்தில் ரிட் மனுவொன்றைத் தாக்கல் செய்தார்.

சென்ற மாதம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரச தரப்பு இணக்கப்பாட்டிற்கு வருவதாகக் கூறியதைத் தொடர்ந்து அதனை ஏற்றுக் கொண்ட மனுதாரரான ஆசிரியை பஹ்மிதா தான் மீண்டும் ஷண்முஹாவிற்கு அனுமதிக்கப்படவேண்டும் என்று கேட்டிருந்தார்.அதனை ஏற்றுக் கொண்ட அரச தரப்பு இன்று (02.02.2022) ஆசிரியை பஹ்மிதாவை மீண்டும் ஷண்முஹாவிற்கு கடமையை ஏற்குமாறு அனுமதித்தது. அதற்கான கடிதத்தினை கல்வி அமைச்சு அனுப்பியிருந்தது.

அதன் பிரகாரம் இன்று ஷண்முகாவிற்கு கடமையேற்கச் சென்ற ஆசிரியை பாத்திமா பஹ்மிதாவை அதிபரின் காரியாயலயத்தில் கூடியிருந்த பலர் தடுத்ததோடு தகாத வார்த்தைகளால் திட்டினர்.கூட்டத்தினுள் இருந்த ஒருவர் ஆசிரியை பஹ்மிதாவின் கழுத்தை நெரிக்க முயற்சி செய்துள்ளதுடன் அவரின் கையடக்கத் தொலைபேசியையும் பறிக்க முயன்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து காயமடைந்த ஆசிரியை பஹ்மிதா திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதே நேரம் பாடசாலையின் அதிபர் தன்னை ஆசிரியை பஹ்மிதா தாக்கியதாக பொய்கூறி அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறிப்பிட்ட விவகாரம் சட்டமா அதிபரின் கவனத்திற்கும் நீதிமன்றத்தின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டுள்ளது.இலங்கையின் அரசியல் யாப்பு கலாச்சார உரிமையை ஒரு அடிப்படை உரிமையாக அங்கீகரிப்பதோடு ஆசிரியர் ஒழுக்கக் கோவை ஹபாயா அணிவதற்கு எந்த தடையும் இடவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *