எரிவாயு வெடிப்பில் உயிரிழந்த பெண்ணின் கணவர் 10 கோடி ரூபா இழப்பீடு கோரி வழக்கு!

கண்டி – குண்டசாலை பகுதியில் சமையல் எரிவாயுடன் தொடர்புடைய வெடிப்பு சம்பவத்தில் எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த பெண்ணின் கணவர் உள்ளிட்ட உறவினர்களால், சமையல் எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

10 கோடி ரூபா இழப்பீடு கோரி குறித்த வழக்கினை தாக்கல் செய்யவுள்ளதாக உயிரிழந்த பெண்ணின் கணவர் தெரிவித்தார்.

51 வயதுடைய பெண் ஒருவரே சமையல் எரிவாயுடன் தொடர்புடைய வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.

மாத்தளை – வில்கமுவ பகுதியைச் சேர்ந்த குறித்த பெண், தமது பிள்ளையின் மேலதிக கற்றல் செயற்பாடுகளுக்காக குண்டசாலை பகுதியில் உள்ள தற்காலிக வீடொன்றில் தங்கியிருந்த நிலையில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் அரசாங்கமோ, அதனுடன் தொடர்புடைய பொறுப்பு வாய்ந்த நிறுவனமோ எந்தவொரு ஆய்வினையும் இதுவரை நடத்தவில்லையென உயிரிழந்த பெண்ணின் கணவர் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.

அதேநேரம் மட்டக்களப்பிலும் சமையல் எரிவாயுடன் தொடர்புடைய வெடிப்பு சம்பவம் ஒன்று நேற்று பதிவானது.

இந்த சம்பவத்தில் சமையல் எரிவாயு அடுப்பு சேதமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *