கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களை அதிகம் தாக்குமாம் புதிய வைரஸ்!

ஒமிக்ரான் வைரஸ் ஏற்கனவே கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களை அதிகளவில் தாக்கும் அபாயம் இருப்பதாக முதற்கட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. எனவே கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென மருத்துவ நிபுணர்கள் கூறி உள்ளனர். தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் எனும் புதிய வகை கொரோனா வைரஸ் மிக ஆபத்தானது என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்த வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் பயண தடைகளை விதித்துள்ளன.

ஆனாலும், அதற்குள் பல்வேறு நாடுகளில் இந்த புதிய வகை வைரஸ் பரவி விட்டது. ஜப்பான், பிரான்சிலும் நேற்று ஒமிக்ரான் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் சுமார் 15 நாடுகளில் ஒமிக்ரான் பரவி உள்ளது. ஆனால், இந்த வைரஸ் இதுவரை எந்த உயிர் பலியையும் ஏற்படுத்தவில்லை. இதன் பாதிப்புகள், முந்தைய டெல்டா வைரஸ் பாதிப்புகளை விட குறைவாகவே உள்ளது. சாதாரண காய்ச்சல், உடல் வலி, தொண்டை கரகரப்பு போன்றவை ஒமிக்ரான் வைரசின் அறிகுறிகளாக டாக்டர்கள் கூறி உள்ளனர்.

எனவே, இந்த வைரஸ் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அறிய ஓரிரு வாரங்களாகும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். அதே சமயம், முதற்கட்ட ஆய்வுகளின்படி, 50 பிறழ்வுகளை கொண்டிருக்கும் இந்த வைரஸ் மிக வேகமாக பரவுக்கூடியது மட்டுமின்றி, ஏற்கனவே கொரோனா பாதித்து குணமடைந்தவர்களை எளிதில் தாக்கும் வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கூறி உள்ளனர். டெல்டா வைரசால் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் குறைபாட்டுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை ஒமிக்ரான் தாக்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஆனாலும், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மற்றும் தொற்று மூலம் இயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தி பெற்றவர்களுக்கு பெரிய அளவுக்கு பாதிப்புகள் இருக்காது என கூறப்படுகிறது. ஆரம்ப கட்ட நிலையில் ஒமிக்ரான் வைரஸ் குறித்து எதையும் உறுதியாக கூற முடியாது என்கின்றனர் ஆய்வாளர்கள். தென் ஆப்ரிக்காவில் தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. எனவே, அங்கு ஒமிக்ரான் வைரசால் பலர் பாதிக்கப்படுவதை வைத்து எந்த முடிவுக்கும் வர முடியாது. அதிகளவில் தடுப்பூசி செலுத்திய நாடுகளில் இந்த வைரஸ் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல் போவதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதற்கான அறிகுறிகள் மிக பொதுவானதாக இருப்பதால் வைரஸ் தொற்று உள்ளவர்கள் அதை வேகமாக பிறருக்கு பரப்பும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு, பலி நிலவரங்கள் பற்றி ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:
* சர்வதேச விமானங்களுக்கு தடை விதிக்காதது ஏன்?
ஒமிக்ரான் வைரஸ் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உடனேயே, சர்வதேச பயண தடை விதிக்கக் கோரி டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வலியுறுத்தி வருகிறார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கும் அவர் கடிதம் எழுதி உள்ளார். மேலும், நேற்று அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு விமான சேவையை நிறைய நாடுகள் நிறுத்தி உள்ளன. ஆனால், இந்த விஷயத்தில் ஒன்றிய அரசு தாமதிப்பது ஏன்? சர்வதேச விமானங்களை நிறுத்தாததால்தான் கொரோனா முதல் அலையை நாம் எதிர்கொண்டோம். ஏராளமான விமானங்கள் டெல்லிக்கு தான் வருகின்றன. எனவே, டெல்லிக்குதான் அதிக பாதிப்பு இருக்கிறது. உடனடியாக விமானங்களை நிறுத்துங்கள்,’ என ஒன்றிய அரசை மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.

* வீட்டிற்கே சென்று தடுப்பூசி; டிச.31ம் தேதி வரை நீட்டிப்பு
ஒமிக்ரான் வைரசை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, ஒன்றிய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் தலைமையில் மாநில சுகாதார அதிகாரிகள் ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில், டிசம்பர் 31ம் தேதிக்குள் நாடு முழுவதும் அனைவருக்கும் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தவும், 2வது டோஸ் தடுப்பூசி பணியை வேகப்படுத்தவும், டிசம்பர் 31ம் தேதி வரை வீட்டுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தை தொடரவும் முடிவு செய்யப்பட்டது. கடந்த மாதம் 3ம் தேதி பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட இத்திட்டம் நவம்பர் 30ம் வரை இருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதே போல், புதிய வகை வைரஸ் அச்சுறுத்தல் இருப்பதால் நாடு முழுவதும் உள்ள கொரோனா கட்டுப்பாடுகளை வரும் டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *