வடிவேலுடன் நடிச்ச அந்த ஒரு சீன்தான் ஆபத்தா போச்சு தீபா தெரிவிப்பு!

சரத்குமார் நடித்த ’மாயி’ படத்தில் இடம்பெற்ற இந்த காமெடி காட்சி இன்றுவரை எவர்க்ரீனாக டிவி சேனல்களில் ஒளிபரப்பப்படுகிறது. வடிவேலுவுக்குப் பெண் பார்க்கப் போன இடத்தில் நிகழும் இந்தக் காட்சியில் மணப் பெண்ணாக வந்து, இந்த ஒரேயொரு சீன் மூலம் தீபா ‘மின்னல்’ தீபா ஆனார். தற்போது ‘சுந்தரி’ சீரியலில் நடித்து வரும் இவர் சுமார் 15 வருட இடைவெளிக்குப் பிறகு, தற்போது வெளியாகி இருக்கும் ’ராஜவம்சம்’ படம் மூலம் மீண்டும் சினிமாவுக்கு வந்திருக்கிறார்.
தீபாவிடம் பேசினேன். “எனக்கு அடையாளம் தந்த படம் ’மாயி’தான். அதுக்கு முன்னாடியும் பிறகும் கூட சில படங்கள்ல நடிச்சிருந்தாலும் ‘மின்னல்’ கேரக்டர் பெரிய அளவுல ரீச் ஆச்சு. வடிவேலு சார்தான் ‘இந்த அடைமொழியை கெட்டியாப் பிடிச்சுக்கோ… இனி உனக்கு மளமளன்னு வாய்ப்பு வரும்னு சொல்லியிருந்தார்.

அவர் கூட ஒர்க் பண்ணினதே ஜாலியான அனுபவமா இருந்துச்சு. அடிக்கடி கண்ணை அந்த மாதிரி வச்சுக் காட்டச் சொல்லியிருக்கார். ஷூட்டிங் ஸ்பாட்டுல என்னை ’வாடி போடி’னுதான் கூப்பிடுவார். தப்பா நினைக்காதீங்க… அன்பா, சும்மா ஜாலிக்கு அப்படிப் பேசுவார். அவருமே பல வருஷங்களுக்குப் பிறகு இப்பதான் திரும்ப சினிமாவுக்கு வர்றார். என்னுடைய ரீ என்ட்ரியும் இப்பதான் நடக்குது. என்ன ஒரு கோ இன்சிடெண்ட் பாருங்க” என்றவரிடம், “இவ்ளோ வருட இடைவெளிக்கு என்ன காரணம்?” எனக் கேட்டேன்.

துக்குக் காரணமும் இதே ‘மின்னல்’ கேரக்டர்தான். வடிவேலு சார் சொன்ன மாதிரி மளமளனு வாய்ப்பு எதுவும் வரலை. வந்த வாய்ப்பும் வழிதவறித்தான் போச்சு. எப்படி ஏத்தி விட்டுச்சோ அதே அளவுக்கு எனக்கு வாய்ப்பு கிடைக்காமப் போனதுக்கும் இந்தக் கேரக்டர்தான் காரணம்.

அந்த சீன்ல மாறு கண் இருக்கிறவளா நடிச்சதை வச்சு நிஜத்துலயே எனக்கு மாறு கண்ணுதான்னு நினைச்சிட்டாங்க. அந்த நேரத்துல ‘இந்தக் கேரக்ட்ருக்காக நிஜமாகவே மாறு கண் உள்ளவங்களைக் கூட்டி வந்து நடிக்க வச்சிருக்காங்க’னு யாரோ சிலர் தப்பா கொளுத்திப் போட, இண்டஸ்ட்ரியில் நிறையப் பேர் அதை நம்பிட்டாங்க. அதனாலேயே எனக்கு வர வேண்டிய எவ்வளவோ வாய்ப்புகள் தவறிப்போயிடுச்சு.

எனக்கு இது எப்படித் தெரியும்னா, எங்கிட்டயே சிலர் நேரடியா இது பத்திக் கேட்டிருக்காங்க. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை. ‘எனக்கு அந்த மாதிரி இல்லைங்க’னு போஸ்டர் அடிச்சா ஒட்ட முடியும்?

அதனால என்னையே நொந்தபடி சிவனேன்னு வீட்டுல இருந்தேன். அந்த டைம்ல பொருளாதார ரீதியா ரொம்பக் கஷ்டப்பட்டேன். துணி தைச்சுக் கொடுக்கிறது மாதிரி நிறைய வேலைகளைச் செய்திருக்கேன். பிறகு ஒருவழியா சீரியல் வாய்ப்பு வரத் தொடங்கினதும்தான் நிலைமை சரியாச்சு’’ என்றவர் புதிதாக சினிமாவுக்கு நடிக்க வருகிறவர்களுக்கு டிப்ஸ் சிலவற்றைத் தந்தார்.

“ரெண்டு விஷயத்தைச் சொல்லியே ஆகணும். முதலாவது சினிமாவோ சீரியலோ அதை மட்டுமே நம்பி இருக்காதீங்க. சைடுல ஏதாச்சும் ஒரு தொழில் வச்சுக்கணும். அதுதான் சமயத்துல கை கொடுக்கும்.

இரண்டாவது விஷயம், சினிமான்னா அட்ஜஸ்மெண்ட்ங்கிறது இருக்கத்தான் செய்யும்னு சொல்வாங்க. எங்கிட்டயே சொல்லியிருக்காங்க. அந்த ஒரு விஷயத்துக்காகவே நான் பண்ணாத படங்களின் லிஸ்டே இருக்கு. புதுசா நடிக்க வர்றவங்ககிட்ட இதைச் சொல்றதுக்குன்னே ஒரு கூட்டம் தயாரா இருக்கு. நீங்கதான் நல்லா யோசிச்சு இந்த விஷயத்துல தெளிவா இருக்கணும். அந்த மாதிரி ஆட்களைத் தவிர்க்கணும்” என்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *