கடலில் சிக்கித் தவித்த புலம்பெயர்ந்தோர் படகில் பிறந்த குழந்தை!

பிறந்த குழந்தை உட்பட கடலில் சிக்கித் தவித்த 244 புலம்பெயர்ந்தோரை இத்தாலிய கடலோர காவல்படை காப்பாற்றியுள்ளது.

கலாப்ரியா கடற்கரையிலிருந்து சுமார் 50 மைல் தொலைவில் மீன்பிடி படகு ஒன்றில் புலம்பெயர்ந்தோர் சிலர் கண்டுபிடிக்கப்பட்டதாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

நவம்பர் 27, சனிக்கிழமை இரவு நடந்த இச்சம்பவத்தை அடுத்து சுமார் 16 மணி நேரம் போராடி மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக இத்தாலிய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

இதில் 41 சிறார்களும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தின் போது கடல் சீற்றம் அதிகமாக இருந்ததாகவும், சிக்கலான ஒரு நடவடிக்கையை முன்னெடுத்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பச்சிளம் குழந்தை ஒன்றை மீட்கும் புகைப்படத்தையும் கடலோர காவல்படையினர் வெளியிட்டுள்ளனர். ஆனால் அதன் தாயார் தொடர்பில் தகவல் ஏதும் வெளியிடப்படாத நிலையில், குழந்தை படகில் பிறந்ததா, அல்லது பிறந்த சில மணி நேரங்களில் அந்த தாயார் படகு பயணத்திற்கு தயாரானாரா என்பது குறித்தும் உறுதியான தகவல் வெளியாகவில்லை.

முன்னதாக இங்கிலாந்திற்குச் செல்ல முயன்ற 27 பேர் புதன்கிழமை கலேஸ் அருகே இறந்த சம்பவத்தை அடுத்து 244 பேர்களுடன் மீன்பிடி படகு ஒன்று சிக்கியுள்ளது.

வாரத்தின் தொடக்கத்தில், தெற்குத் தீவான லம்பேடுசாவின் கரையோரத்தில் படகு ஒன்றில் தத்தளித்த 296 புலம்பெயர்வோரை இத்தாலிய கடலோரக் காவல்படையினர் சிரமப்பட்டுக் காப்பாற்றினர். அவர்களில் 14 பெண்களும் 8 குழந்தைகளும் அடங்குவர் என தகவல் வெளியிடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *