ஒமிக்ரோன் டெல்டாவை விட இரு மடங்கு பிறழ்வு கொண்டது!

ரோமிலுள்ள புகழ்பெற்ற பாம்பினோ கெசு மருத்துவ மனையைச் சேர்ந்த இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் குழு, புதிய கொரோனா ஒமிக்ரோன் மாறுபாட்டின் முதல் படத்தைத் தயாரித்து வெளியிட்டுள்ளனர்.

இந்த முப்பரிமாணப் படம், கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாடு பதிப்பை விட ஒமிக்ரோன் மாறுபாட்டில் இரு மடங்கு பிறழ்வுகள் இருப்பதைக் காட்டுகிறது.

ஒமிக்ரோன் மாறுபாட்டின் முதல் படத்தைப் பற்றிய அறிக்கையை வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள் குழு, “ஒமிக்ரோன் மாறுபாட்டில் டெல்டா மாறுபாட்டை விட பல பிறழ்வுகள் இருப்பதை நாம் தெளிவாகக் காணலாம், எல்லாவற்றிற்கும் மேலாக மனித உயிரணுக்களுடன் தொடர்பு கொள்ளும் புரதம் இந்த ஒமிக்ரோனின் ஒரு பகுதியில் குவிந்துள்ளது.

இந்த மாறுபாடுகள் மிகவும் ஆபத்தானவை என்று இப்போதே சொல்லி விட முடியாது. இது குறைவான ஆபத்தை உடையதா அல்லது அதிகம் ஆபத்தானதா என்பதை இனிவரும் ஆய்வுகள் நமக்குத் தெரிவிக்கும்” என்று தெரிவித்தனர்.

மேலும், “பொட்ஸ்வானா, தென்னாபிரிக்கா மற்றும் ஹொங்கொங்கில் இருந்து கிடைக்கப்பெற்ற இந்தப் புதிய ஒமிக்ரோன் மாறுபாடு பற்றிய ஆய்விலிருந்து இந்தப் படம் தயாரிக்கப்பட்டது. அனைத்து மாறுபாடுகளின் வரைபடத்தையும் பிரதிபலிக்கும் வகையில் இந்தப்படம் உள்ளது.

இந்தப் பிறழ்வுகளானது பரிமாற்றத்தில் அல்லது தடுப்பூசிகளின் செயல் திறனில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை ஆய்வகச் சோதனைகள் மூலம் கண்டறிவதே இப்போது முக்கியம்”எனத் தெரிவித்தனர்.
ஒமிக்ரோனின் இந்த முதல் புகைப்படம் மூலமாக, அசல் SARS CoV-2 வைரஸுடன் ஒப்பிடும்போது ஒமிக்ரோன் மாறுபாட்டில் புரதத்தின் கட்டமைப்பு வலதுபுறத்திலும், டெல்டா மாறுபாட்டில் புரதத்தின் கட்டமைப்பு இடது புறத்திலும் இருப்பதைக் காட்டுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *