மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ரத்து?

அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையால் ஐரோப்பிய நாடுகள் இரண்டாவது முறையாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை ரத்து செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் கட்டுக்குள் வராமலையே உள்ளது. இதனால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தரப்பு தெரிவிக்கின்றனர்.

உலகில் இறப்பு எண்ணிக்கைகள் அதிகரித்துள்ள ஒரே பிராந்தியம் இன்று ஐரோப்பா என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஒரே வாரத்தில் மட்டும் கொரோனா பாதிப்பால் இறந்தவர்கள் எண்ணிக்கை 5% அதிகரித்துள்ளது.

நாட்டின் தற்போதைய நிலை அபாயகட்டத்தில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார் பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் டி குரூ. கொரோனா தொடர்பில் கடுமையான கட்டுப்பாடுகளை அமுலுக்கு கொண்டுவந்துள்ள அவர், வாரத்தில் குறைந்தது நான்கு நாட்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யும்படி மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆஸ்திரியாவில், நிலைமை மிக மோசமாக மாறியுள்ளதையடுத்து, தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மக்களுக்கு தனியாக ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளை அந்த நாட்டு அரசு விதித்துள்ளது.

ஜேர்மனியில் வியாழக்கிழமை மட்டும் 68,366 பேர்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வாரம் வியாழக்கிழமை பதிவான பாதிப்பு எண்ணிக்கையில் இருந்து இது 40% அதிகம் என கூறப்படுகிறது.

இதே நிலை நீடிக்கும் எனில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் நிலை உருவாகும் என நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மட்டுமின்றி, ஜேர்மனியிலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு ஊரடங்கு உட்பட கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

செக். குடியரசு நிர்வாகமும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 4.25 மில்லியன் மக்களை ஊரடங்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் இதே நிலை நீடித்து வருவதால், இந்த முறையும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ரத்தாகும் என்றே கூறப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *