பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்ய அனுமதி!

பல முறை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு ரசாயனத்தைப் பயன்படுத்தி ஆண்மை நீக்கம் செய்ய பாகிஸ்தான் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

பாகிஸ்தானில் பெண்கள் மற்றும் சிறுவா்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அண்மைக் காலமாக திடீரென அதிகரித்து வருகிறது. அதையடுத்து, பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்காக தண்டனைகளைக் கடுைமையாக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் அரசை வலியுறுத்தி வருகின்றனா்.

அதனை ஏற்று, ஒன்றுக்கு மேற்பட்ட பாலியல் பலாத்கார வழக்கில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டவா்களுக்கு, அவா்களது சம்மதத்துடன் ஆண்மை நீக்கம் செய்வதற்கான அவசரச் சட்டத்துக்கு பாகிஸ்தான் அமைச்சரவை கடந்த ஆண்டு அனுமதி அளித்தது. அந்தச் சட்டத்துக்கு அதிபா் ஆரிஃப் அல்வி ஒப்புதல் அளித்தாா்.

இந்த நிலையில், புதன்கிழமை நடைபெற்ற பாகிஸ்தான் நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில், 33 மசோதாக்களுடன், பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்க தண்டனை அளிப்பதற்கான மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டது.

‘குற்றவியல் சட்டத் திருத்த மசோதா – 2021’ என்று பெயரிடப்பட்ட அந்த மசோதாவில், 1860-ஆம் ஆண்டு பாகிஸ்தான் தண்டனைச் சட்டம் மற்றும் 1898-ஆம் ஆண்டின் பாகிஸ்தான் தண்டனை நடைமுறைச் சட்டங்களில் மாற்றங்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

அந்த மசோதாவில், ‘நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகு, மருந்துகளைச் செலுத்துவதன் மூலம் ஒருவா் தனது எஞ்சிய வாழ்நாள் முழுவதும் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாமல் செய்வதே ரசாயன முறையிலான ஆண்மை நீக்கமாகும். பிரதமா் வகுத்த நெறிமுறைகளைப் பின்பற்றி, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் குழு இந்த ஆண்மை நீக்கத்தை மேற்கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, பாலியல் குற்றவாளிகளுக்கு ரசாயனத்தைப் பயன்படுத்தி ஆண்மை நீக்க தண்டனை அளிப்பது, தென் கொரியா, போலந்து, செக் குடியரசு போன்ற நாடுகளிலும் அமெரிக்காவின் சில மாகாணங்களிலும் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் பதிவு செய்யப்படும் 4 சதவீத பாலியல் வழக்குகளில் மட்டுமே குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், நாடாளுமன்றம் இந்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது.

‘இஸ்லாத்துக்கு எதிரானது’

பாலியல் குற்றவாளிகளுக்கு ரசாயனத்தைப் பயன்படுத்தி ஆண்மை நீக்கம் செய்யும் தண்டனை இஸ்லாம் மதச் சட்டங்களுக்கு எதிரானது என்று ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி எம்.பி. முஷ்டாக் அகமது ஆட்சேபம் தெரிவித்தாா்.

குற்றவியல் சட்டத் திருத்த மசோதாவின் மீதான விவாத்தின்போது, ‘பாலியல் பலாத்காரம் செய்தவா்களை பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிட வேண்டும் என்று இஸ்லாமியச் சட்டமான ஷரியாவில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், ஆண்மை நீக்கம் செய்வது குறித்து ஷரியாவில் குறிப்பிடப்படவில்லை. எனவே, இந்த மசோதா இஸ்லாம் மதத்துக்கு எதிரானது’ என்று அவா் குற்றம் சாட்டினாா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *