வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றுக்கொண்ட நடிகை பிரீத்தி ஜிந்தா!

பாலிவுட்டில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. நடிகர் ஷாருக்கான், இயக்குநர் கரண் ஜோஹர், தயாரிப்பாளர் ஏக்தா கபூர் மற்றும் அவரது சகோதரர் என வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட பாலிவுட் பிரபலங்கள் அதிக அளவில் இருக்கின்றனர். அந்த வரிசையில் நடிகை பிரீத்தி ஜிந்தாவும் இணைந்துள்ளார்.

பிரீத்தி ஜிந்தா நீண்ட நாள்களாக நெஸ் வாடியா என்ற தொழிலதிபரை காதலித்து வந்தார். அவர்கள் காதல் முறிந்து பிரச்னை கோர்ட் வரை சென்றது. தற்போது பிரீத்தி ஜிந்தா அமெரிக்காவைச் சேர்ந்த ஜீன் குட்இனஃப் (Gene Goodenough) என்பவரைத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.

தற்போது அத்தம்பதிக்கு வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன.இதனை பிரீத்தி ஜிந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், “நானும், எனது கணவரும் எல்லையில்லா மகிழ்ச்சியில் இருக்கிறோம். எங்களது இதயம் மகிழ்ச்சியில் நிரம்பியிருக்கிறது.

எங்களது குடும்பத்திற்கு ஜெய் ஜிந்தா குட்இனஃப் மற்றும் ஜியா ஜிந்தா குட்இனஃப் ஆகியோர் புது வரவாக வந்துள்ளனர். இந்தப் புது வரவால் எங்களது வாழ்க்கையில் புதிய மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதற்காக பாடுபட்ட டாக்டர்கள் மற்றும் வாடகைத்தாய்க்கு எங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

பிரீத்தி ஜிந்தா 2016ம் ஆண்டுதான் ஜின் குட்இனஃபைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதிலிருந்து அமெரிக்காவிலேயே பிரீத்தி ஜிந்தா வாழ்ந்து வருகிறார். தற்போது பிரீத்தி ஜிந்தாவிற்கு 46 வயதாகிறது. பஞ்சாப் ஐபிஎல் கிரிக்கெட் அணியில் பங்குதாரர்களில் ஒருவரான பிரீத்தி ஜிந்தாவிற்கு பாலிவுட் பிரபலங்கள் சமூக வலைதளங்களில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *