இலங்கைக்கு உண்டியல் மூலம் பணம் அனுப்பும் முறை அதிகரிப்பு!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள், இலங்கைக்கு பணத்தை அனுப்புவதற்காக தற்போது அதிகளவில் உண்டியல் பணப் பரிமாற்று முறையை பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கையர்களே இந்த பணப்பரிமாற்று முறையை அதிகளவில் பயன்படுத்தி கூறப்படுகிறது.

இதுவரை உத்தியோகபூர்வமான முறையில், வங்கி பரிமாற்றம் அல்லது தனியார் பணப் பரிமாற்று நிறுவனங்கள் ஊடாக இலங்கைக்கு பணம் அனுப்பி வைக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இலங்கையில் இருக்கும் கறுப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றும் குழு மற்றும் அவுஸ்திரேலியாவில் உள்ள தரகர்கள் சிலர் இணைந்து, அவுஸ்திரேலிய சமஷ்டி பொலிஸாருக்கு தெரியாமல் இந்த உண்டியல் பணப் பரிமாற்று நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இலங்கைக்கு பணத்தை அனுப்பும் நபரிடம் அவுஸ்திரேலிய டொலர்களை பெற்றுக்கொள்ளும் இந்த நபர்கள், இலங்கையில் பணத்தை பெற்றுக்கொள்ளும் நபரின் வங்கிக் கணக்கை பெற்று, இலங்கையில் உள்ள முகவர் மூலமாக அன்றைய தினமே டொலருக்கு பதிலாக இலங்கை ரூபாவை வைப்புச் செய்து வருகின்றனர்.

இதனால், உண்டியல் பணப் பரிமாற்று முறை அவுஸ்திரேலியாவில் பிரபலமாகியுள்ளது.

எவ்வாறாயினும் உண்டில் பணப் பரிமாற்ற முறையின் மூலம் இலங்கைக்கு பணம் அனுப்பி வைக்கப்படுவதால், நாட்டிற்கு கிடைக்க வேண்டிய டொலர் குறைந்து வருகிறது.

அது மாத்திரமல்லாது இலங்கையில் உள்ள சட்டவிரோத வர்த்தகர்கள் தமது கறுப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றிக்கொள்வதுடன் அவர்கள் டொலர்களை சம்பாதிக்கவும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த பணப் பரிமாற்றத்திற்காக டொலர்களை பெற்றுக்கொள்ளும் நபர்கள் தமது அடையாளம் வெளியில் தெரியாதபடி பார்த்துக்கொள்வதுடன் பணத்தை பெற்றுக்கொண்டமை அல்லது பணத்தை அனுப்புவதற்கான பற்றுச்சீட்டை கூட வழங்குவதில்லை என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *