அனைவரையும் திருப்தியடைய செய்வதென்றால் ஐஸ்கிரீம் விற்பனை செய்யவேண்டும்!


வரவு செலவுத் திட்டம் தொடர்பில் பலரும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில் நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தி நிதியமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) இம்முறை வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்துள்ளார் என நீதி அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற 2022 வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அனைவரையும் திருப்திப்படுத்தும் வகையில் செயற்டபமுடியாது. அவ்வாறு செய்வதென்றால் ஐஸ்கிரீம் விற்பனை செய்யவேண்டும் என ஆங்கில பழமொழி ஒன்று இருக்கின்றது.

அதனால் சவால்களுக்கு மத்தியில் இவ்வாறான வரவு செலவு திட்டம் ஒன்றை சமர்பிக்க அதற்கு விசேட துணிவு அவசியம். அத்தகைய துணிவுடனேயே அரசாங்கம் இம்முறை சாத்தியமான வரவுசெலவுத் திட்டத்தை முன் வைத்துள்ளது.

அரசத்துறையை நவீனமயப்படுத்த வேண்டும். அனைத்து துறைகளிலும் டிஜிட்டல் முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் எனவும் அப்போதுதான் ஊழல் மோசடிகளில் இருந்து வெளிவர முடியும்.

ஏற்றுமதித்துறை ஓரளவு முன்னேற்றம் அடைந்து வரும் நிலையில் சுற்றுலாத் துறை முன்னேற்றத்திற்கு இன்னும் சில காலம் எடுக்கும்.

இத்தகைய சூழ்நிலை நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் மீண்டும் நாட்டில் கொரோனா அதிகரித்து நாட்டை மீண்டும் முடக்கும் நிலையை ஏற்படுத்த வேண்டாம் என நாம் எதிர்க் கட்சியினரிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

எதிர்க்கட்சி ஆளும் கட்சி என அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டிய காலகட்டம் இது என்பதை அனைவரும் உணர வேண்டும்.

70 வருடங்களுக்கு பின்னர் நீதித்துறை முன்னேற்றத்தில் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் தங்கள் சிக்கல்களை விரைவாக தீர்த்துக் கொள்ளும் நிலை உருவாக்கப்பட வேண்டியது அவசியம்.

அதேவேளை சுமார் ஐந்து வருடங்களுக்கு மேல் சிறைக்கைதிகளை சிறையில் அடைத்து வைத்து அவர்களுக்கு உணவு வழங்குவதை விட புதிய நீதிமன்றம் அமைக்கப்பட்டு அவர்களுக்கான வழக்கு விசாரணைகளை விரைவாக மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதே சிறந்தது. அது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *