சீனப்பெரும்சுவரின் பிண்ணனியில் இருக்கும் மர்மம்!

சீனப்பெரும்சுவரின் அற்புத நிர்மாணம் பற்றிய தகவல்கள் கொஞ்சம் ரகசியமாகவே இருக்கின்றன.

அதனை சரியாக புரிந்துகொள்ள, சுமார் இரண்டாயிரம் வருடங்கள் பின்னோக்கி செல்ல வேண்டும். ஆரம்பகால சுவர்கள் கற்களைக்கொண்டு அமைக்கப்படவில்லை.

கோபி பாலைவனத்தில் வெறும் மண்ணைத்தவிர வேறு ஒன்றுமில்லை. ஆகவே அந்த மண்ணைக்கொண்டுதான் சுவர்கள் நிர்மாணிக்கப்பட்டன. காய்ந்த நாணல் புற்கள் அடுக்கப்பட்டு, அதன் மேலே மண் நிரப்பப்பட்டது.

மண்ணை அழுத்துவதன் மூலம் அது திடமாக்கப்பட்டது. அதன் மேலே இன்னுமொரு அடுக்ககாக காய்ந்த நாணல் புற்கள் அடுக்கப்பட்டன.

அதற்கு மேலே மீண்டும் மண். இவ்வாறாக, வெறும் புற்களையும், மண்ணையும் கொண்டு, இருபது அடி உயரமான சுவர்களை பண்டைய சீனர்கள் அமைத்தார்கள்.

இன்று, இந்த சுவற்றின் உயரமான பகுதிகள் இடிந்து விழுந்திருந்தாலும், இரண்டாயிரம் வருடங்கள் நிலைத்து நிற்கும் இந்த நிர்மாணிப்பு எவ்வாறு சாத்தியமானது ? அந்த மண்ணில் காணப்பட்ட ஒருவகை சுண்ணாம்பு கலவை, மழை நீருடன் சேர்ந்து, சுவற்றை மேலும் பலம் வாய்ந்ததாக மாற்றியது.

அத்தோடு, காய்ந்த நாணல் புற்கள், அதிகபட்ச மழைநீர் வழிந்தோடுவதற்கு உதவியது.

ஆகவேதான், இந்த மண் சுவர்கள் இரண்டாயிரம் ஆண்டுகள் தாண்டி, இன்றும் நிலைத்திருக்கின்றன.

சுமார் நானூறு ஆண்டுகாலமாக இந்த முறையில் சுவர்கள் கட்டப்பட்டன. அப்படி கட்டப்பட்ட சுவர்களின் மொத்த நீலம், ஏறத்தாழ 9௦௦௦ km. ஆனால், இது வெறும் ஆரம்பம் மட்டுமே.

சீனப்பெரும்சுவரின் கதையும், நீளமும், இத்தோடு நின்றுவிடவில்லை…. பண்டைய காலத்தில் சீனப்பெரும்சுவரை பார்வையிட்டவர்கள், அதன் செங்கற்களுக்கு இடையே இருந்த வெள்ளை நிறமான பொருள் என்ன ? என்று சீனர்களிடம் கேட்டார்கள்.

அதற்கு அவர்கள், “அது வேறு ஒன்றுமில்லை, மனித எலும்புக்கூடுகள்தான்” என்று பதில் சொன்னார்கள். கேட்டவர்களை இது கொஞ்சம் பயம்கொள்ள செய்தது. இன்றைய காலத்தில், செங்கற்களை இணைத்து கட்டிடடம் கட்ட சீமெந்து பயன்படுகிறது.

அந்தக்காலத்தில் சீமெந்துக்கு பதிலாக ஒரு வகையான சுண்ணாம்பு கலவை பயன்பட்டது. ஆனால், சுண்ணாம்புக்கு மேலதிகமாக ஏதோ ஒன்று அதனோடு கலக்கப்பட்டிருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதினார்கள்.

அவர்கள் மேற்கொண்ட ஆய்வின் பயனாக ஒரு விந்தையான உண்மை வெளிவந்தது.

அவசரத்துக்கு ஒட்டும் பசை கிடைக்கவில்லை என்றால், அவித்த அரிசியை அதாவது சோற்று பருக்கையை பசையாக பயன்படுத்தி கடிதம் அனுப்பும் வழக்கம் இருக்கிறது.

அதே ஒட்டும்தன்மை கொண்ட சோறுதான் இந்த சுவர்களின் செங்கற்களை இரண்டாயிரம் ஆண்டுகளாக இணைத்து வைத்திருக்கிறது.

கற்களை இணைக்க பயன்பட்ட கலவைக்கு குறிப்பிட்ட அளவு சோற்றை சேர்த்தால், அதன் ஒட்டும்தன்மை அல்லது இறுக பற்றும் தன்மை பல மடங்கு அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *