இலங்கையில் ஒவ்வொரு குடிமகனும் 9லட்சத்து 50ஆயிரம் ரூபாவுக்கு அடகு வைக்கப்பட்டுள்ளனர்!

நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் 9லட்சத்து 50ஆயிரம் ரூபாவுக்கு அடகு வைக்கப்பட்டுள்ளனர் என்று ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினா் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

இலங்கையில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஒரு இலங்கை மாதாவே இருக்கிறாா். இந்தநிலையில் இந்த நாட்டை துண்டு துண்டுகளாக உடைத்து விற்பனை செய்வதை 225 நாடாளுமன்ற உறுப்பினா்களும் தடுப்பதே பிரதான இலக்காக இருக்கவேண்டும். இதனை மேற்கொள்ளமுடியாதவா்களை எவ்வாறு மக்கள் பிரதிநிதிகள் என்று கூறுவது என்று அவா் கேள்வி எழுப்பியுள்ளாா்.

இதற்காக கட்சி பேதம் இன்றி, இனவாதம் இன்றி, மதவேறுபாடு இன்றி செயற்படாது போனால், நாட்டை காப்பாற்ற முடியாது என்றும் விஜயதாச ராஜபக்ச குறிப்பிட்டுள்ளாா்.

இலங்கையில் 2005 இல் மஹிந்த ராஜபக்ச ஆட்சியை பொறுப்பேற்ற போது 2000 பில்லியன் ரூபாவாக இருந்தது.

இன்று 22000 பில்லியன் ரூபாவை வெளிநாட்டு கடன்களாக செலுத்தவேண்டியுள்ளது. இதன்படி நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் 9லட்சத்து 50ஆயிரம் ரூபாவுக்கு அடகு வைக்கப்பட்டுள்ளாா் என்று விஜயதாச தொிவித்துள்ளாா்.

பௌத்த மகாநாயக்கா்கள் முதல் கா்தினால் வரையிலான அனைத்து இலங்கை மக்களும் 9லட்சத்து 50ஆயிரம் ரூபாவுக்கு அடகு வைக்கப்பட்டுள்ளதாக அவா் சுட்டிக்காட்டினாா்

இன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் வருமானம் சீனாவுக்கு செல்கிறது. போட் சிட்டியின் வருமானம் சீனாவுக்கு செல்லவுள்ளது.

இரவு 12 மணிக்கு உடன்படிக்கை செய்யப்பட்டு நாட்டின் சொத்துக்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்தநிலையில், நாட்டின் பாதீட்டில் ஏற்படும் துண்டுவிழும் தொகையை எவ்வாறு நிரப்புவது, சீனாவிடமே பிச்சையெடுக்கவேண்டும் என்று அவா் குறிப்பிட்டாா்.

அரசாங்கம் மற்றும் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் பாதீடு தொடா்பாக விவாதம் செய்வதனால், நாட்டின் பொருளாதாரம் மேம்படப்போவதில்லை என்று கூறிய விஜயதாச ராஜபக்ச, அன்று மஹிந்த ராஜபக்ச, தமது முதலாவது நாடு, இரண்டாவது நாடு, மூன்றாவது நாடு என்று கூறியபோதும் இன்று வெளிநாடுகளுக்கு இலங்கையின் சொத்துக்கள் விற்பனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று தொிவித்தாா்.

எனவே அடுத்து வரும் ஜனாதிபதி அல்லது பொதுத்தோ்தல் ஒன்றின்போது, திருட்டுத்தனமாக உடன்படிக்கை செய்யப்பட்டு, வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள நாட்டின் சொத்துக்களை திரும்பப்பெறவேண்டும் என்பதற்கான சா்வஜன வாக்கெடுப்பாகவே கருதவேண்டும் என்று விஜயதாச ராஜபக்ச குறிப்பிட்டாா்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *