1980-ல் தொடங்கி 1986-ல் ரிலீஸான கமலின் திரைப்படம்!

சினிமாவில் குறிப்பிட்ட நாளில் தொடங்கப்பட்ட படம், பல்வேறு காரணங்களால் வருடக் கணக்காகத் தள்ளிப்போவது சஜகம்.

பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு அந்தப் படம் மீண்டு வந்து ஹிட்டான சம்பவங்களும் இருக்கிறது. மீண்டு வராமல் பாதியிலேயே முடங்கிய படங்களும் இருக்கின்றன.

கமல்ஹாசன், ரஜினிகாந்த் நடித்து 1978 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ’இளமை ஊஞ்சலாடுகிறது’.

நாயகிகளாக ஸ்ரீப்ரியா, ஜெயசித்ரா இந்தப் படத்தை ஸ்ரீதர் ஸ்டைலாக உருவாக்கி இருந்தார். இந்தப் படமும் இதன் பாடல்களும் அதிக வரவேற்பைப் பெற்றது.

இதற்குப் பிறகு ஸ்ரீதர், கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்க ’சக்தி’ என்ற படத்தை இயக்குவதாக அறிவித்தார். சினிமாஸ்கோப் படம். இதில் கமல் ஜோடி அம்பிகா.

கிளாமராக அம்பிகா வரும் புகைப்படங்கள் அந்தக் காலகட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தின.

1980 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் படம், பல்வேறு பிரச்சனைகளால் பாதியிலேயே நின்றுவிட்டது. பிறகு சில வருடங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கினார்கள்.

கமல்ஹாசன், அம்பிகா, ஜெய்சங்கர், ராஜீவ், வி.எஸ்.ராகவன், சாதனா, தேவிகா உட்பட பலர் நடித்திருந்தனர். இளையராஜா இசை அமைத்திருந்தார்.

’ஆயிரத்தில் நீ ஒருத்தன்’, ’நான் பூவெடுத்து வைக்கணும் பின்னால’, ’ஒரு நிலவும் மலரும்’ ‘பட்டுப் பூவே’ உட்பட அனைத்து பாடல்களும் ஹிட்.

படத்தைப் பார்த்தால் முதலில் எடுக்கப்பட்ட காட்சிகளும் சில வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் எடுக்கப்பட்டக் காட்சிகளும் அப்படியே தெரியும்.

கமலின் ஹேர்ஸ்டைலில் இருந்து பல காட்சிகளில் அந்த மாற்றங்களை காணலாம்.

பிறகு இந்தப் படத்தை டைட்டிலை மாற்றி, ’மீண்டும் சூர்யோதயம்’ என்ற பெயரில் ரிலீஸ் செய்ய முடிவு செய்தார்கள்.

ஆனால், அப்போது நடத்தப்பட்ட உள்ளாட்சித் தேர்தலில் திமுக பல இடங்களை கைப்பற்றி இருந்தது.

அந்த நேரத்தில் இந்த டைட்டிலோடு படம் வெளியானால், திமுக-வின் வெற்றிக்காக இப்படி தலைப்பு வைத்திருக்கிறார்களோ என நினைக்க வாய்ப்பிருக்கிறது என்பதால் அதை மீண்டும் மாற்ற முடிவு செய்தார் ஸ்ரீதர். பிறகு வைத்த டைட்டில்தான் ’நானும் ஒரு தொழிலாளி’!

இயக்குநர் ஸ்ரீதர், எம்.ஜி.ஆர் ஹீரோவாக நடிக்கும் படம் ஒன்றை இயக்குவதாக இருந்தது. அதற்காக வைத்திருந்த தலைப்பு இது.

அந்தப் படம் தொடங்கப்படவில்லை என்பதால், அதை இந்தப் படத்துக்கு வைத்தார் ஸ்ரீதர். படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இது ரிலீஸ் ஆன அதே நாளில் ஸ்ரீதர் இயக்கிய மற்றொரு படமான ’யாரோ எழுதிய கவிதை’ படமும் ரிலீஸ் ஆனது. ஒரே இயக்குநரின் இரண்டு படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆவது அரிதாக நடக்கும் விஷயம்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *