பசுவின் வயிற்றில் இருந்து 52 கிலோ பிளாஸ்டிக் நீக்கிய மருத்துவர்கள்!

பசுவின் இரைப்பையிலிருந்த 52 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை 5மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றினர் வேப்பேரி தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள். அதற்கான செலவு எவ்வளவு தெரியுமா?

உங்கள் குப்பைத் தொட்டிகளில் நீங்கள் தூக்கிவீசும் பிளாஸ்டிக் பொருட்கள் எங்கு சென்று முடியும் என்று எப்போதாவது யோசித்தீர்களா? பிளாஸ்டிக் ஏற்படுத்தும் தீங்குகள் பல அறிவோம். மனிதயினத்துக்கு மட்டுமின்றி, வாயில்லா ஜீவன்களுக்கும் பிளாஸ்டிக் கொடூர அரக்கனாக இருக்கிறது என்பதற்கான பல சான்றுகளுள் ஒன்று இது. ஆம் சென்னை வேப்பேரியில், ஒரு பசுவின் வயிற்றில் இருந்து 52 கிலோகிராம் பிளாஸ்டிக் கழிவுகளை தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம்(தனுவாஸ்) வெள்ளிக்கிழமை அகற்றியது.

திருமுல்லைவாயிலைச் சேர்ந்த முனிரத்னம் கடந்த 6 மாதங்களுக்கு முன் வேலூர் சந்தையில் 4 மாடுகளை வாங்கியுள்ளார். அதிலொரு பசு விலைக்கு வாங்கும் போதே சினையாக இருந்துள்ளது. இதையடுத்து, கடந்த 20 நாட்களுக்கு முன்பு கன்றுக்குட்டியை ஈன்றது அப்பசு. குட்டி ஈன்றதிலிருந்தே, பசு பால் கொடுப்பது கணிசமாகக் குறைந்துள்ளது.

நாளொன்றுக்கு 3 லிட்டர் பால் மட்டுமே கறந்துள்ளது. தவிர சாணம் மற்றும் சிறுநீர் கழிக்கவும் முடியாமல் அவதிப் பட்டுள்ளது. வயிற்றுவலியின் காரணமாக அடிக்கடி காலை வயிற்றில் உதைத்துள்ளது. மாட்டின் உடல்நலத்தில் வித்தியாசத்தை உணர்ந்த மாட்டின் உரிமையாளர் முனிரத்ரனம், மாட்டினை கால்நடை மருத்துவரிடம் கொண்டு சென்று காட்டியுள்ளார்.

பசுவை பரிசோதித்த மருத்துவர், மாட்டினை வேப்பேரியில் உள்ள தனுவாசுக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். அங்கு, மருத்துவர்கள் பசுவின் ஆசனவாயில் கையால் பரிசோதித்தபோது ஆரம்பத்திலேயே பிளாஸ்டிக்கின் அடைப்பு இருந்ததை உணர்ந்துள்ளனர்.

“பசுவின் ஆசனவாயில் கையை விட்டு பரிசோததித்தபோது பிளாஸ்டிக் இருப்பதை உணர முடிந்தது. பசுவின் வயிற்றில் இரண்டு ஆண்டுகளாக அந்த பிளாஸ்டிக்குகள் குவிந்திருக்கக்கூடும். ஒரு எக்ஸ்ரே மற்றும் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செ ய்ததில் பசுவின் வயிற்றின் நான்கு அறைகளில் ஒன்றான முதல் இரைப்பையில் 75% பிளாஸ்டிக் ஆக்கிரமித்திருப்பதைக் கண்டறிந்தோம்,” என்றார் கால்நடை மருத்துவ பேராசிரியர் பி. செல்வராஜ்.

5 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த அறுவை சிகிச்சை…
பசுவிற்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்த மருத்துவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை அறுவைசிகிச்சையை செய்தனர். டாக்டர் வேலவன், டாக்டர் சிவசங்கர், டாக்டர் சிவா, டாக்டர் செல்வராஜ், டாக்டர் நாகராஜன், டாக்டர் அருணாமன் மற்றும் முதுகலை மாணவர்களின் உதவியுடன் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்துள்ளது மருத்துவர்கள் குழு.

“பொதுவாக மயக்க மருந்து கொடுக்காமல், குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் மயக்க மருந்து கொடுத்தோம். பசு தனது வயிற்றைச் சுற்றியுள்ள பகுதியில் எதையும் உணர்ந்திருக்காது. இந்த அறுவை சிகிச்சை வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்கு தொடங்கப்பட்டு அன்று மாலை 4.30 மணிக்கு முடிந்தது,” என்றார் டாக்டர் அருணாமன்.

“இது ஒரு நீண்ட மற்றும் சிக்கலான அறுவை சிகிச்சை. பிளாஸ்டிக் கழிவுகள் இரைப்பையின் சுவர்களில் ஒட்டியிருந்ததால், இரைப்பையின் சுவர்களுக்கு எவ்வித சேதமும் இல்லாமல் இருக்க மிகவும் கவனமாக இருக்க வேண்டியிருந்தது. பிளாஸ்டிக்குகளுக்கு இடையில் ஒரு சில ஊசிகளும் ஊக்குகளும் இருந்தன. ஒரு வேளை ஊசி விலங்கின் இதயத்திற்கு சென்றிருந்தால் உயிருக்கே ஆபத்தாகியிருக்கும். அறுவைசிகிச்சைக்குப் பிறகு, முதல் இரைப்பையில் 5 கிலோ தவிடு, வெல்லம் மற்றும் ப்ரோபயோடிக் உணவுகளும் நிரப்பப்பட்டுள்ளது,” என்றார் அறுவை சிகிச்சை உதவி பேராசிரியர் ஏ.வேலவன்.

முனிரத்னத்தின் மாடு, இப்போது வேப்பேரி கல்லூரிக்குள் ஒரு சிறிய கொட்டகையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. “ஒரு வாரத்தில், அது தனது காலில் நிற்பதற்கான வலிமையை மீண்டும் பெறும். ஆனால், அது பால் உற்பத்தி செய்ய குறைந்த பட்சம் ஒரு மாத காலம் ஆகும். தற்போது பசு நல்ல உடல் நலத்துடன் உள்ளது.

மாடு மற்றும் கன்றுடன் முனிரத்னம்

இந்த சிக்கலான அறுவைசிகிச்சைக்கு மொத்தமே முனிரத்தினத்துக்கு 70ரூபாய் செலவாகியுள்ளது. 20ரூபாய் பதிவு கட்டணம். 50ரூபாய் அறுவை சிகிச்சைக் கட்டணம். இதே அறுவை சிகிச்சையை தனியார் கால்நடை மருத்துவமனையில் செய்திருந்தால் ரூ 35 ஆயிரம் செலவாகியிருக்கும்,” என்றார் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் பாலசுப்பிரமணியன்.

“அசைப்போடும் விலங்குகளான மாடு, எருமை போன்ற விலங்குகளுக்கு உணவுப் பொருட்களையும், பிளாஸ்டிக்குகளையும் வேறுப்படுத்த தெரியாது. உணவானது அலுமினிய பேப்பரிலோ அல்லது பிளாஸ்டிக் பையிலோ மூடப்பட்டிருந்தால், ஒரு நாய் அல்லது பூனை அதைத் திறக்கும், அதை சாப்பிட முடியுமா என்று மோந்து பார்க்கும்.

அதன் விருப்பப்படி இருந்தால் மட்டுமே அதை உட்கொள்ளும். ஆனால், அசைப்போடும் விலங்குகளுக்கு இது பொருந்தாது. அவைகள் கண்மூடித்தனமாக அனைத்து உணவுகளையும் உட்கொள்ளக் கூடியது. மேலும், அவைகள் நாக்கை சுழற்றி, முழுப் பொருளையும் புரட்டி பின்னர் அதை மெல்லும். செரிமான செயல்முறையும் வேறுபட்டது.

அதன் வயிற்றின் அறையிலிருந்து விழுங்கிய உணவை மீண்டும் வாயிற்கு கொண்டுவந்து அசைப்போடும். உணவுடன் சேர்த்து உட்கொள்ளப்படும் பிளாஸ்டிக் ஒருபோதும் ஜீரணிக்காது. எனவே அவை குவியலாக குவிந்துவிடும். அதற்கான அறிகுறிகளும் உடனடியாக தென்படாது. நீண்ட காலத்திற்குப் பிறகு தீவனத்தை உட்கொள்ளாது. மலம் கழித்தல் மற்றும் சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை ஏற்படும், என்று நியூஸ் மினிட்டிடம் விளக்கி கூறினார் டாக்டர் பாலசுப்பிரமணியன்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

“கால்நடைகள் எதை உண்கின்றன என்பதை கண்காணிப்பது நடைமுறையில் சாத்தியமில்லை என்றாலும், கழிவுகளை அதிக பொறுப்புடன் அப்புறப்படுத்த மக்களால் முடியும். பிளாஸ்டிக்கிற்குள் உணவுப் பொருட்களை வைத்து அப்புறப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஊசிகள் மற்றும் பிற கூர்மையான பொருட்களும் சாப்பாட்டு பையினுள் இருந்துவிடாமல் கவனித்து கொள்ளவேண்டும்,” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *