பயணத்தடை நீக்கத்தால் மற்றுமொரு கொத்தணி உருவாகும் அபாயம்!

நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை நீக்கப்பட்டதன் காரணமாக மிக விரைவில் மேலுமொரு கொரோனா அலை உருவாகுவதற்கான கடும் எச்சரிக்கை நிலை உருவாகியுள்ளதாக இலங்கை மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது.

பரிந்துரைகள் உள்ளடங்கிய கடிதம் அந்த சங்கத்தினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கண்காணிப்பு நடவடிக்கைகளின் அடிப்படையில் தற்போதைய சட்டம் மற்றும் வரையறைகளைக் கடுமையாக்க வேண்டும் என்றும் அந்தச் சங்கம் பரிந்துரைத்துள்ளது.

அதன்போது சுகாதார நடைமுறைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை முழுமையாகக் கண்காணித்தல் மற்றும் சான்றுப்படுத்தல் கட்டாயமானது என்றும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அதேபோன்று முக்கிய தரப்பினருக்கு மூன்றாம் கட்ட தடுப்பூசியாக பைசர் தடுப்பூசியைச் செலுத்துவது அவசியம் என்றும் கொரானா தொற்று பரவலடையும் எச்சரிக்கை தன்மையை தற்போதைய நிலையில் கவனத்தில் கொள்ளவேண்டிய கட்டாயம் அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மறுவாழ்வாக்கப்பட வேண்டிய 60 வயதுக்கு குறைவான நோயாளர்கள் மற்றும் சகல சுகாதார சேவையாளர்களுக்கு மூன்றாம் கட்டமாக பைசர் தடுப்பூசி வழங்க வேண்டமென்றும் அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.

கட்டடங்களில் இடம்பெறும் திருமண நிகழ்வுகள், சமய நிகழ்வுகள், மரணச் சடங்குகள், இசை நிகழ்ச்சிகள், பொதுக் கூட்டங்கள் ஆகிய நிகழ்வுகளில் பங்குபற்றுவோரின் எண்ணிக்கையை வரையறுக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *