காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள்!

நாள் முழுவதற்கும் தேவையான ஆற்றல் காலை உணவிலிருந்தே கிடைக்கிறது. ஆனால் உலக அளவில், காலை உணவைத் தவிர்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதாக கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன. ‘உடல் எடையைக் குறைக்கிறேன்’ என்று பலர் காலை உணவைத் தவிர்க்கிறார்கள். ‘நேரமில்லை’ என்கிறார்கள் சிலர்.

காலை உணவைத் தவிர்த்தவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில், பெரும்பாலானோருக்கு ரத்த அழுத்தம் இயல்பைவிட அதிகமாக  இருந்திருக்கிறது. உயர் ரத்த அழுத்த நோயாளிகள், ‘காலையில் தவறாமல் சாப்பிடுகிறீர்களா’ என்பதைக் கவனித்தால், காலை  உணவு சாப்பிடுபவர்களைவிட, உணவைத் தவிர்ப்பவர்களுக்குதான் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.

சர்க்கரை நோய்: காலை உணவைத் தவிர்ப்பதால், குளுக்கோஸ் வளர்சிதை சுழற்சியில் பாதிப்பு ஏற்பட்டு சர்க்கரை நோய் உண்டாவதற்கான  வாய்ப்புகள் அதிகரிக்கும். காலையில் சாப்பிடாமல் இருக்கும்போது, குளுக்கோஸ்-இன்சுலின் சார்ந்த செயல்பாடுகள் குறையும். அதன் பிறகு  மதிய உணவின் மூலம் கிடைத்த அதிக குளுக்கோஸை ஈடுகட்ட, அதிகமாக இன்சுலின் சுரந்து, தொடர்ந்து மாற்றங்கள் நிகழும். சில மாதங்கள் கழித்து ’இன்சுலின் ரெசிஸ்டன்ஸ்’ ஏற்பட்டு, சர்க்கரை நோயாளியாக நாமும் மாறிவிடுவோம்.

ஹார்மோன் மாற்றங்கள்: உணவைத் தவிர்ப்பதால் உடலில் சுரக்கும் ’டோபமைன்’ மற்றும் செரடோனின் ஹார்மோன்களின் அளவுகள் குறையும். இந்த இரண்டு ஹார்மோன்களும் மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவுபவை.

உணவைத் தவிர்க்கும்போது, பசியைத் தூண்டக்கூடிய க்ரெலின் ஹார்மோன் மற்றும் ‘சாப்பிட்டது போதும்’ என்ற உணர்வைக் கொடுக்கக்கூடிய  லெப்டின் ஹார்மோனின் இயல்பு நிலையிலும் பல மாறுதல்கள் ஏற்படும்.

காலை உணவை மென்று சாப்பிடும்போது, எச்சில் சுரப்பில் உள்ள லைஸோசைம் (கிருமிநாசினி செய்கையுடையது), வாய்ப் பகுதியில் மையமிட்டுள்ள நுண்கிருமிகளை அழிக்கும். அதுவே உணவைச் சாப்பிடாவிட்டால், கிருமிநாசினியின் ஆதரவின்றி, வாய்ப் பகுதியில் கிருமிகளின் ஆதிக்கம் அதிகரித்து, விரைவில் வாய்நாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

குறிப்பிட்ட நேரத்தில் சுரக்கும் செரிமானச் சுரப்பிகளை உணவு ஆசுவாசப்படுத்தாதபோது, வயிற்றுத் தசைகளில் படர்ந்திருக்கும் மென்படலத்தில் புண்கள் உண்டாக வாய்ப்புண்டு. மேலும் உணவு எதுக்களித்தல், வயிற்றுவலி, செரிமானத் தொந்தரவுகள் உண்டாகும்.

முந்தைய நாள் இரவு முதல், அடுத்த நாள் மதியம் வரை நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்பதால், உடலில் நடக்கும் அனைத்து வளர்சிதை  மாற்றங்களிலும் பாதிப்புகள் ஏற்படும். காலையில் சாப்பிடாமல் தவிர்க்கும்போது, செயல்படுவதற்குத் தேவைப்படும் சக்தி கிடைக்காது. உணவின் மூலம் கிடைக்க வேண்டிய அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் கிடைக்காமல் சோர்வும், மந்தமான நிலையும் நம்மைப் பற்றிக்கொள்ளும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *