இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலையால் பதிவாகிய அனர்த்தங்கள்!

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலையால் நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த 02 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழப்புக்களின் எண்ணிக்கையும் 25 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்நிலையில், தற்போதைய பாதிப்புக்கு ஏதுவான தாழமுக்கம் திசை மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் மற்றுமொரு புதிய தாழமுக்கம் எதிர்வரும் 13 ஆம் திகதி உருவாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலையால் இயற்கை அனர்த்தங்களில் சிக்கி இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 17 மாவட்டங்களைச் சேர்ந்த 60 ஆயிரத்து 264 குடும்பங்களைச் சேர்ந்த 02 இலட்சத்து 12 ஆயிரத்து 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

145 பிரதேச செயலகப் பிரிவுகள் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வீடுகளை விட்டு வெளியேறிய 03 ஆயிரத்து 648 குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்து 476 பேர் 76 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் 10 ஆயிரத்து 23 குடும்பங்களைச் சேர்ந்த 37 ஆயிரத்து 690 பேர் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக 23 வீடுகள் முழுமையாகவும் ஆயிரத்து 229 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன.

இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் நேற்று இரவிற்கு பின்னர் அடை மழை பெய்யாத நிலையில் வெள்ள நீர் வடிந்து வருவதாக அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

எனினும் 2 நாட்கள் பெய்த கடும் மழை காரணமாக யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட, இளவாலை வடமேற்கு ஜெ 222 கிராம சேவகர் பிரிவில் 26 குடும்பங்களை சேர்ந்த 96 பேர் இரண்டு இடைந்தங்கல் முகாங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளர்.

குறித்த பகுதிக்கு யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜா மற்றும் இராணுவத்தினர் சென்று பார்வையிட்டுள்ளதுடன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றனர்.

மன்னார் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 501 குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்து 350 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட உதவி பணிப்பாளர் கே.திலீபன் தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக 2021 ஆம் 2022 ஆம் ஆண்டிற்கான பெரும்போக பயிர்ச் செய்கையில் சுமார் 5700 ஏக்கர் விவசாய நிலம் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

அத்துடன் அனுராதபுரம் பகுதியில் ஏற்பட்ட பலத்த மழை காரணமாக மல்வத்து ஓயா நீர்வரத்து அதிகரித்துள்ளதுடன், மன்னார் தேக்கம் மற்றும் குஞ்சுக்குளம் பகுதிக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகின்றது. எனவே தாழ்நில பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் குஞ்சுக்குளம், தேக்கம் பகுதிகளை அண்மித்து வசிப்போர் அவதானமாக செயற்படுமாறு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஸ்ரான்லி டிமேல் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடரும் மழை காரணமாக மல்வத்து ஓயாவின் நீர்மட்டத்தின் அளவு நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து வருகின்றமை தொடர்பாக மத்திய நீர்ப்பாசன பணிப்பாளர் நடராஜா யோகராஜா,மத்திய நீர்ப்பாசன பொறியியலாளர், மன்னார் அரசாங்க அதிபர் மடு பிரதேச செயலாளர் அடங்கிய உயர் மட்ட குழுவினர் தேக்கம் மற்றும் குஞ்சுக்குளம் நீர்வரத்து பிரதான ஆற்றுப்பகுதிக்கு நேரடி விஜயம் மேற்கொண்டு பாதுகாப்புக் குறித்தும் கவனம் செலுத்தியுள்ளனர்.

வடக்கு, கிழக்கு வடமத்திய மாகாணங்கள் உள்ளிட்ட பல பகுதிகளிலும் மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்காக 60 மீட்பு பணியாளர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

இதேவேளை, நீர்கொழும்பில் உள்ள பல வீதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ள நிலையில், 800 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன், சீரற்ற வானிலையால் நாடாளாவிய ரீதியில் 18 வீடுகள் முற்றாகவும் 960 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

சீரற்ற வானிலையால் பதுளை, கொழும்பு, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, மாத்தளை, கண்டி, நுவரெலியா, குருநாகல் மற்றும் காலி மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

கேகாலை, கண்டி மற்றும் குருநாகல் மாவட்டத்திலுள்ள பல பிராந்திய பிரிவுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால், ஆறுகளின் நீர் மட்டங்கள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில், அடுத்துவரும் 12 மணித்தியாலத்தில் குறைந்த தழமுக்கப்பகுதி, தாழமுக்கமாக தென்மேற்கு வங்காள விரிகுடா பிராந்தியத்தில் வலுவடையும் என ஓய்வுபெற்ற வளிமண்டலவியல் திணைக்கள வானிலை அதிகாரி சூரியகுமார் தெரிவித்துள்ளார்.

இதனிடையே மேலும் ஒரு புதிய தாழமுக்க பகுதியானது தெற்கு அந்தமான் கடல் பிராந்தியத்திற்கு மேலாக எதிர்வரும் 13ஆம் திகதி உருவாகும் சாத்தியம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்து வரும் 48 மணித்தியாலத்தில் ஆழ்ந்த தாழமுக்கமாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *