அபுதாபியில் இந்திய பிட்ச் பராமரிப்பாளர் திடீர் மரணம்!

இந்தியரான அபுதாபி கிரிக்கெட் மைதானத்தின் தலைமை பிட்ச் பராமரிப்பாளர் மோகன் சிங், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் போட்டி தொடங்கும் முன்பாக திடீரென காலமானது இந்திய கிரிக்கெட் வாரியத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை பிட்ச் பராமரிப்பாளரான தல்ஜித் சிங்குடன் பல ஆண்டுகள் ஒன்றாக வேலை பார்த்தவரான மோகன் சிங், கடந்த 2000வது ஆண்டில் இந்தியாவில் இருந்து பணி நிமித்தமாக அமீரகத்துக்கு மாறுதலாகி சென்றார்
.
அபுதாபி கிரிக்கெட் மைதானத்தின் தலைமை பிட்ச் பராமரிப்பாளராக மோகன் சிங் பணியாற்றி வந்த நிலையில் இன்று திடீரென அவர் காலமாகி உள்ளார். அபுதாபி மைதானத்தில் ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து போட்டி தொடங்கும் முன்பாக அவர் காலமாகிவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்தியரான மோகன் சிங்கின் மரணத்தை அமீரக கிரிக்கெட் வாரியமும் உறுதி செய்துள்ளது. ஆனால் அவருடைய மரணத்துக்கான காரணம் வெளியாகவில்லை. மோகன் சிங் இன்று மறைந்திருக்கிறார். இது மிகவும் துரதிர்ஷ்டவசமான நிகழ்வு எனவும் இந்த துயர நிகழ்வு குறித்து விரிவாக கூறுவதாகவும் அமீரக கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

மோகன் சிங் அமீரகத்துக்கு வேலைக்காக செல்லும் முன் பிசிசிஐயின் தலைமை பிட்ச் பராமரிப்பாளரான தல்ஜித் சிங்குடன் ஒன்றாக பணியாற்றியிருக்கிறார். 22 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய கிரிக்கெட்டுடன் இணைந்து பணியாற்றி வரும் தல்ஜித் சிங், மோகன் சிங்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

மோகனின் மறைவு தனது அதிர்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
தல்ஜித் சிங் கூறுகையில், “மோகன் என்னிடம் வேலை பார்க்க வந்த போது மிகவும் சிறந்த ஒரு சிறுவனாக விளங்கினான். மிகவும் திறமைசாலி, கடின உழைப்பாளியாக விளங்கினார். உத்தரகண்ட் மாநிலம் கர்வால் பகுதியைச் சேர்ந்தவர்.

மோகன் அமீரகத்துக்கு சென்றாலும் கூட இந்தியாவுக்கு வரும்போதெல்லாம் என்னை வந்து சந்திப்பான். ஆனால் சமீபகாலமாக அவன் இங்கு வரவில்லை. இவ்வளவு இளம் வயதில் அவன் மறைந்தது பேரதிர்ச்சியாக இருக்கிறது என தல்ஜித் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *