1095 நாட்கள் ஓடி சாதனைப் படைத்த நடிகர் கமல்ஹாசன் படம்!

ராபின்ஹுட் ஸ்டைல் படங்களுக்கு ரசிகர்களிடம் எப்போதுமே வரவேற்பு உண்டு. அதாவது இருக்கிறவர்களிடம் கொள்ளையடித்து இல்லாதவர்களுக்கு கொடுப்பது போன்ற கதைகளை கொண்ட படங்கள்.

இதுபோன்ற படங்கள் வெற்றி பெறுவதும் இதே போன்ற கதைகள் அதிகம் உருவானதற்கு காரணம்.

எம்.ஜி.ஆர். நடித்த ’மலைக்கள்ளன்’ படத்தில் இருந்து இதே ஸ்டைல் கதைகள் அதிகம் வெளியாகி இருக்கின்றன. அதில் ஒன்று சூப்பர் ஹிட்டான கமல்ஹாசனின் ’குரு’!

பழக்கப்பட்ட கதைதான் என்றாலும் புதுமையான, விறுவிறுப்பான திரைக்கதையால் வெற்றி பெற்றது இந்தப் படம்.

இந்தியில் தர்மேந்திரா, ஹேமமாலினி ஜோடியாக நடித்து 1973 ஆம் ஆண்டு வெளியான படம் ’ஜுக்னு’.

பிரமோத் சக்கரவர்த்தி இயக்கி இருந்த ’ஜுக்னு’ அங்கு சூப்பர் ஹிட். அந்தப் படத்தை தமிழில் 1980 ஆண்டு ரீமேக் செய்தார் இயக்குநர் ஐ.வி.சசி. அதுதான் ’குரு’.

சூப்பர் ஹிட் ஜோடியான கமல்ஹாசன், ஸ்ரீதேவி இதிலும் காதலர்களாக நடித்தனர். முத்துராமன், நம்பியார், மேஜர் சுந்தர்ராஜன், மோகன்பாபு, ஒய்.ஜி.மகேந்திரன், சிலோன் மனோகர் என ஏகப்பட்ட நட்சத்திரப் பட்டாளங்கள்.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் எடுத்தார்கள். ஜெயனன் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்த இந்தப் படத்துக்கு இளையராஜா இசை அமைத்திருந்தார்.

அவர் இசையில், ’பறந்தாலும் விடமாட்டேன்’, ’பேரைச் சொல்லவா’, ’ஆடுங்கள் பாடுங்கள்’ உட்பட அனைத்துப் பாடல்களும் வரவேற்பைப் பெற்றன.

ஸ்ரீதேவியும் மோகன்பாபுவும் ஹெலிகாப்டரிலும் கிளைடர் விமானத்தில் கமலும் பறந்தபடி பாடும், ’பறந்தாலும் விடமாட்டேன்’ பாடல் அந்தக் காலகட்டத்தில் அதிகம் ரசிக்கப்பட்டது.

ஆச்சரியமாகப் பார்க்கப்பட்ட அந்தக் காட்சியும் ஜெயனன் வின்சென்டின் ஒளிப்பதிவும் அதிகமாக பாராட்டப்பட்டன. ரேடியோக்களில் அப்போது அதிகம் ஒலிபரப்பப்பட்ட பாடல்களில் இதுவும் ஒன்று. இதை கவியரசு கண்ணதாசன் எழுதியிருந்தார்.

படத்தில் ’குரு’ என்ற பெயரில் கொள்ளையடிக்கும் கமல், பலத்த காவலையும் மீறி தங்கமீனை கொள்ளையடிக்கும் காட்சி ரசிகர்களின் படபடப்பை அப்போது அதிகம் எகிற வைத்தது.

காதல், ஆக்‌ஷன், சென்டிமெட், காமெடி என படத்தில் அத்தனை கமர்சியல் அம்சங்களும் கச்சிதமாகப் பொருந்தி இருந்தன.

அப்போது தமிழ்நாட்டில் ஓடுவதை போலவே இலங்கையிலும் தமிழ்ப் படங்களுக்கு வரவேற்பு இருக்கும். கமலின் இந்தப் படத்துக்கும் அப்படித்தான். அங்கு 5 தியேட்டர்களில் 200 நாட்களுக்கு
மேல் ஓடியிருக்கிறது ’குரு’.

இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள கிங்ஸ்லி தியேட்டரில் 3 வருடம் ஓடி சாதனைப் படைத்திருக்கிறது ’குரு’. அதாவது 1095 நாட்கள்! இந்தச் சாதனையை வேறு எந்த படமும் முறியடித்திருப்பதாகத் தெரியவில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *