அண்ணாத்த படம் எப்படி இருக்கு?

சூப்பர் ஸ்டார் ரஜினியின் படம் மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு திரையரங்குகளில் ரீலீஸ் ஆகி ரசிகர்களை இந்த தீபாவளிக்கு மிகவும் உற்சாக படுத்து வருகிறது .

சன் பிட்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் வெளிவந்துள்ள அண்ணாத்தே படம் ஏகப்பட்ட நடிகர்கள் பட்டாளத்துடன் பிரமாண்டமாக தயாரிக்க பட்டு அதிகப்படியான திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் எத்தனையோ அண்ணன் தங்கை பாசம் சம்பந்த பட்ட படங்களை நாம் பார்த்து இருப்போம் . இது கொஞ்சம் வித்யாசமான எமோஷன் .

மதுரைப் பக்கத்தில் சூரக்கோட்டை எனும் ஒரு கிராமத்தில் அண்ணனுக்காக ஒரு தங்கை தங்கைக்காக ஒரு அண்ணன் என்று பாச பிணைப்புடன் கதை துவங்குகிறது. படத்தின் முதல் காட்சியிலேயே கல்கத்தாவை காட்டிவிடுகிறார்கள். இதன் பின்னணி என்ன என்பது இடைவெளி வரும் வரை நீடிக்கிறது.

ஏகப்பட்ட சென்டிமெண்ட் காட்சிகள் கணக்கில் வைத்துக் கொள்ள முடியாத அளவுக்கு பஞ்ச் டயலாக்குகள் என்று படம் முதல் பாதி நகர்ந்துகொண்டிருக்கிறது. படிப்பை முடித்துவிட்டு ஊர் திரும்பும் தங்கையை வரவேற்கிறார் அண்ணன் காளையன்.

தன் அன்புத்தங்கையை தங்க மீனாட்சியை தங்கம் தங்கம் என்று காட்சிக்கு காட்சி கொஞ்சுவதும் கெஞ்சுவதும் சென்டிமென்டாக ஊர் மக்கள் முன்னணியில் சொந்த பந்தங்கள் முன் பேசுவதும் வாடிக்கையாக இருக்கிறது

நிறைய நிறைய லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் சூப்பர் ஸ்டார் படம் என்பதை தாண்டி சில பல காட்சிகள் மிகவும் நேரிடுகிறது. ரஜினியின் பல படங்கள் மும்பை சென்று தாதாவாக மாறி மிக பெரிய டான்களுடன் சண்டை போடுவார். இந்த முறை லொகேஷன் சேன்ஞ்.அவ்வளவு தான்.

நிறைய காட்சிகளில் காளையன் (ரஜினி) பன்ச் வசனங்களை பேசும் போது சுத்தமாக எடுபட வில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. ஓவர் டோஸ் ஓவர் பன்ச் காட்சிக்கு காட்சி திணிக்க பட்டு இருக்கிறது .

அண்ணன் தங்கச்சி பாசம் திரையில் மட்டுமே இருக்கே தவிர படத்தை பார்க்கும் எவருக்கும் அந்த உணர்வும் பாசமும் ஒட்டவில்லை. இரண்டாம் பாதியில் தங்கைக்காக மறைந்து இருந்து பாதுகாக்கும் அண்ணனாக காளையன் பல வீர தீர சாகசங்கள் செய்தாலும் எல்லாமே திணிக்க பட்ட காட்சிகளாக தான் துண்டு துண்டாக இருக்கிறது.

டி இமான் இசையில் அண்ணாத்த அண்ணாத்த பாடல் பத்மவிபூஷன் எஸ்பிபி குரலில் ரசிகர்கள் ஆரவாரத்துடன் மிகவும் மாசாக உணர்ச்சி பொங்க திரையரங்குகளில் ஒலிக்கிறது. படத்தில் வரும் எல்லா பாடல்களுமே கதையோடு தொடர்புடைய பாடல்களாகவும் . காட்சிகளாகவும் இருப்பதினால் மிகவும் ரசிக்கும்படி இருக்கிறது. 

டி இமான் தனது தனித்துவமான இசையை கொடுத்து உள்ளார் . பிஜிஎம் விஷயத்தில் ரஜினிகென்றே பிரத்தியேகமாக மெனக்கெட்டு அமர்க்களப்படுத்தி இருக்கிறார்.குறிப்பாக “வா சாமி” பாடல் மிக பெரிய உத்வேகத்தை தியேட்டரில் ஏற்படுத்துகிறது . திருமூர்த்தி ,முகேஷ் ,சம்ஷுதின் மூவரும் இந்த பாடலை மிரட்டி உள்ளனர் .

படத்தில் மூன்று காமெடியன்கள் சூரி சதீஷ் மற்றும் சத்தியன். நீண்ட நாட்களுக்கு பிறகு சத்தியன் காமெடி சில இடங்களில் ஒர்க் அவுட்டாகி சிரிப்பை ஏற்படுத்துகிறது. இவர்களுடன் சேர்ந்து ரஜினியும் ஏகப்பட்ட லூட்டி அடிக்கிறார். 

சில காமெடிகள் நன்றாக இருந்தாலும் சில நகைச்சுவை காட்சிகள் மொக்கையா தான் இருக்கு. இவர்கள் எல்லாம் பத்தாது என்று அவ்வப்போது மாமோய் மாமோய் என்று கூப்பிடும் குஷ்பூ, அத்தான் அத்தான் என்று கூப்பிடும் மீனா இவர்கள் ஒரு பக்கம் தங்களது பாணியில் ஒரு தினுசாக காமெடி செய்ய முயற்சித்திருக்கிறார்கள்.அத்தனை பேரையும் சமாளிக்கும் ரஜினி யாரிடம் அதிகம் மாட்டிக்கொள்கிறார் என்பது தான் சுவாரஸ்யமான ட்விஸ்ட்

வில்லன் ஜெகபதிபாபு பிரகாஷ்ராஜ் அபிமன்யு சிங் என்று மூன்று பேரும் முக்கோண வடிவில் அடுக்கடுக்காய் பிரச்சனைகளை பலவகையில் கொடுக்கின்றனர் அத்தனையும் சமாளிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் சண்டை காட்சிகள் மற்றும் பஞ்ச் வசனங்கள் அனல் பறக்க பரபரப்பான காட்சிகளாக திரைக்கதை அமைந்துள்ளது. மதுரையாக காட்டப்பட்ட லோகேஷன்ஸ் மற்றும் கல்கத்தாவில் எடுக்கப்பட்ட காட்சிகள் என்று அண்ணாத்த படத்தின் ஜியோகிராபிக் கனெக்சன்ஸ் மிக அழகு.

அதிக எதிர்பார்ப்புடன் வந்த அண்ணாத்த படம் ரஜினி ரசிகர்களை மிகவும் திருப்த்தி அடைய வைத்துள்ளது. கண்டிப்பாக ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாமல் பொதுவான சினிமா ரசிகர்கள் எல்லோருமே குடும்பத்துடன் சென்று இந்தப் படத்தை குதூகலமாக அனுபவிக்கலாம். 

குடும்ப பாசம், உறவுகளுக்கு நடுவே இருக்கும் போராட்டம், போன்ற விஷயங்களை தொடும் பொழுது எல்லோர் மனதிலும் ஈரம் கசியும். அப்படிப்பட்ட விஷயத்தை நன்கு புரிந்த இயக்குனர் சிவா மிகவும் எதார்த்தமாக பதார்த்தமாக ரஜினியை பயன்படுத்திய விதம் மிகவும் பாராட்டத்தக்கது .தீபாவளியன்று வெளியாகியுள்ள அண்ணாத்த படம் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியடையும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

படத்தின் ஆடை வடிவமைப்பு பற்றி குறிப்பாக சொல்லியே ஆக வேண்டும். அனு வர்தன், ததீஷா பிள்ளை, ஷ்ரவ்யா வர்மா, அனு பார்த்தசாரதி,சங்கீதா என்று அனைவரும் மிக பெரிய மெனக்கெடுதலை கொடுத்து மிக எதார்த்தமான உடைகளை காட்சிகளுக்கு தகுந்தவாறு வண்ணமயமாக காட்டி உள்ளனர். 

நயன்தாராவின் அழாகான தோற்றத்துக்கு ,ரஜினியின் ஸ்டைல் வாக் மற்றும் டாக் அனைத்தையும் பொருத்தமாக மேட்சிங் செய்து ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நன்கு உணர்ந்து செயல் பட்டு உள்ளனர் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *