இலங்கையில் முஸ்லிம் சமூகத்தை வேரோடு அழிக்க முயற்சி!


ஒரே நாடு – ஒரே சட்டம் எனும் அரச தலைவரது செயலணி, ஞானசார தேரர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளமை முஸ்லிம் சமுகத்தை பெரும் அச்சமான சூழ்நிலைக்கு இட்டுச்சென்றுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாவிதன்வெளி அமைப்பாளரும் தொழிலதிபருமான சித்தீக் நதீர் (Siththik Nadeer) குற்றம் சுமத்தியுள்ளார்.

முஸ்லிம் சமுகம் – யாரைக் கண்டு அச்சப்படுகிறதோ , அவரையே ஒரே நாடு ஒரே சட்டம் செயலணிக்கு தலைவராக்கியிருப்பது கண்டனத்துக்குரியது என்றும் சித்தீக் நதீர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“ஒரே நாடு ஒரே சட்டம் எனும் செயலணிக்கு சிறுபான்மைச் சமூகம் பலத்த கண்டனத்தை வெளிப்படுத்தி வரும் இன்றைய நிலையில் , குறிப்பாக முஸ்லிம் சமூகம் பலத்த அச்சத்தை எதிர்கொண்டுள்ளது.

பேருவளை கலவரத்துக்கு அடிநாதமாக செயற்பட்டார் எனக் குற்றம் சாட்டப்படும் ஞானசார தேரரை – செயலணிக்கு தலைவராக நியமித்தமை பெரும் அநீதியான செயற்பாடாகும்.

முஸ்லிம் சமூகம் தனியான கலாசாரத்தை பின்பற்றும் இனமாகும். அவர்களுக்கென்று தனியான இஸ்லாமியச் சட்டதிட்டங்கள் உள்ளன. ஆனால் – ஒரே நாடு ஒரே சட்டம் என்பதன் மூலம் முஸ்லிம்கள் தங்களுக்கே உரித்தான சட்டங்களை பின்பற்ற முடியாத சூழல் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ளது.

மறுபக்கம் – நீதியமைச்சின் செயற்பாடுகளை மேற்பார்வை செய்வதற்காக இந்தச் செயலணியை ஏற்படுத்தியமை முறையற்றது. சட்டத்தை உருவாக்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்டமைப்பிற்கு முரணானது. நீதி அமைச்சராக முஸ்லிம் ஒருவரே இருக்கத்தக்கதாக இச் செயலணியின் பொறுப்புக்கள் மேற்கண்டவாறு வடிவமைக்கப்பட்டுள்ளமை முஸ்லிம் சமூகத்தை வேரோடு அழித்து விடுவதற்கு எடுக்கப்படும் முயற்சி என்பதற்கு வேறு சான்று தேவையில்லை.

இனவாதத்தை கையிலெடுத்தால் நிச்சயம் இந்த நாடு பொருளாதார ரீதியாக அழிந்தே போகும். ஏற்கனவே முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பல முன்னணி முதலீட்டாளர்கள் நாட்டிலிருந்து புலம் பெயர்ந்த நிலையில், இந்தச் செயலணியின் பிற்பாடு முஸ்லிம்கள் மத்தியில் உள்ள தொழிலதிபர்களும் நாட்டை விட்டு செல்ல தயாராகி வருவதாகவே அறியக் கிடைக்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *