சிறுவர் உரிமைகளும் சிந்திக்க வேண்டிய பெரியவர்களும்!

– பஸ்றி ஸீ. ஹனியா
LL.B (Jaffna)

உலகில் மனிதனாகப் பிறந்து மனிதனாக வாழ வேண்டுமென்றால் அதற்கு மனித உரிமைகள் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கப்படும் மனித உரிமைகளை நாமும் பின்பற்ற வேண்டும், பிறரது மனித உரிமைகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். அந்தவகையிலே சிறுபராயத்தில் வழங்கப்படும் பாதுகாப்பே அவர்களை எதிர்காலத்துக்கு உரியவர்களாக மாற்றுகின்றது.

வரலாற்றை எடுத்து நோக்கினால் சிறுவர் உரிமைகள் பற்றிப் பேசும் முதல் பிரகடனம் 1924ஆம் ஆண்டே அங்கீகரிக்கப்பட்டு விட்டது. எமது நாட்டிலும் அரசமைப்பு, சட்டங்கள் மூலம் பல நடவடிக்கைகள் சிறுவர்களைப்  பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

அந்தவகையிலேயே இலங்கையின் சிறுவர்கள் உரிமைகள் தொடர்பாக 1992ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சாசனத்தில் உரிமைகள் தெளிவாக விபரிக்கப்பட்டன.

சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்கவென்று ஐக்கிய நாடுகள் சபை பல வேலைத்திட்டங்களை உலகளவில் முன்னெடுத்துள்ளது.

அந்தவகையில் Unicef, Save the children, Global Children, Children International போன்ற சர்வதேச நிறுவனங்கள் சிறுவர்களது உரிமைகளுக்காகச் செயற்பட்டு வருகின்றன; பாதிக்கப்பட்ட சிறுவர்களைப் பாதுகாத்தும் வருகின்றன.

உலகளவில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வுகளை ஆற்றுவதில் இந்த நிறுவனங்களின் பங்கு அளப்பரியதாகும்.

யுத்தங்கள், தீவிரவாதத் தாக்குதல்கள் மற்றும் அனர்த்தங்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக இந்த நிறுவனங்கள் சிறப்பாகச் செயற்பட்டு வருகின்றன.

சிறுவர்களுக்கான உரிமைகளை வழங்கும்போது எதிர்காலத்தில் அவர்கள் மற்றவர்களுக்கும் உரிமை வழங்குபவர்களாக மாறுகின்றனர். அதனால்தான் இன்று சிறுவர் உரிமைகள் தொடர்பில் அதிகமாகப் பேசப்பட்டு வருகின்றன. மேலும், இதற்காகப் பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

சிறுவர் உரிமைகளாக:-

• உயிர் வாழ்வதற்கும் அபிவிருத்திக்குமான உரிமை
• பிறப்பால் பெயரையும் இனத்தையும் பெற்றுக்கொள்வதற்கான உரிமை
• பெற்றோர் பற்றி அறிந்து கொள்வதற்கும் அவர்களின் பாதுகாப்பைப் பெற்றுக்கொள்வதற்குமான உரிமை
• பெற்றோரிடமிருந்து பிரிக்க முடியாமைக்கான உரிமை
• கருத்துக்களை வெளியிடுவதற்கான உரிமையும் சிந்திப்பதற்குமான உரிமையும்
• மனச்சாட்சிக்கும் மதத்துக்குமான உரிமை
• கூட்டிணைவதற்கான உரிமை
• தனித்துவத்துக்கான உரிமை
• ஆரோக்கியத்துக்கான உரிமை
• போதிய கல்விக்கான உரிமை
• ஓய்வுக்கும் விளையாட்டுக்குமான உரிமை
• பொருளாதாரச் சுரண்டலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான உரிமை
• பாலியல் துஷ்பிரயோகங்களிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான உரிமை
• ஆபத்தான செயல்களில் விடுபடுவதிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான உரிமை
• கொடூர சித்திரவதைகள் மற்றும் தண்டனைகளிலிருந்து விடுபடுவதற்கான உரிமை
• சாதாரண வழக்கு விசாரணைக்கான உரிமை
• சுதந்திரத்துக்கும் தற்பாதுகாப்புக்குமான உரிமை

மேலும் இன்னும் பல உட்கிடையான உரிமைகளுடன் சிறுவர் உரிமைகள் தொடர்பான தேசிய சிறுவர் அதிகார சபையின் சட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

நாட்டில் சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டவிதிகளும் நடைமுறைப்படுத்தப்பட்டு அவதானிக்கப்பட்டு வருகின்றன.

எது எவ்வாறாக இருந்தபோதிலும் பாலியல் துஷ்பிரயோகங்கள், பல்வேறு கொடுமைகள் மற்றும் போதைப்பொருள் பாவனைகள் போன்ற தவறான விடயங்களையும் இன்றைய சிறுவர்கள் அனுபவித்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.

ஆனால், இங்கு பெரியோராகிய நாம் செய்யும் தவறுக்குச் சிறுவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். 18 வயதுக்குக் குறைந்த ஒரு பிள்ளை தவறு ஒன்றைச் செய்கின்றதெனில் அது நிச்சயமாக தூண்டல் இன்றி நடைபெற்றிருக்காது.

அவ்வாறு தூண்டுதலில் நடைபெறும் குற்றங்களால் சிறுவர்கள்தான் பாதிப்படையும் நிலையில் இருக்கின்றார்கள். மேலும் இன்றைய சிறுவர்களைக் குற்றம் செய்யாது பாதுகாப்பதன் மூலம்  அவர்கள் பெரியவர்களாகி எதிர்கால சிறுவர்களையும் குற்றம் செய்யாது பாதுகாப்பர்.

ஆகவேதான் எத்தனை சட்டங்கள், எத்தனை பாதுகாப்புகள் இருந்தபோதும் அவையெல்லாம் நடைமுறையில் இருக்கின்றனவா?அவற்றால் முன்னேற்றங்கள் ஏற்படுகின்றனவா? போன்ற கேள்விகள் விவாதத்துக்குரியவைதான்.

பாலியல் துஷ்பிரயோகங்கள் பெரியவர்களே அனுபவிக்கும் மிகப்பெரிய கொடுமையாகும். அதனை சிறுபராயத்தினருக்கும் வழங்குதல் என்பது ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒரு விடயமாகும். மேலும், பெரியவர்களால் தம்மைக் காப்பாற்றிக்கொள்ளவும் தமக்காகக் குரல் கொடுக்கவும் ஒரு துணிவு இருக்கின்றது. ஆனால், இளம் பருவத்தினருக்கு அது கிடையாது. இதை ஆயுதமாகப் பயன்படுத்திக் கொண்டே இற்றைக்கு இத்தனை துஷ்பிரயோகங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.

எமது நாட்டின் நிலையைப் பொறுத்தவரைக்கும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படாத பெண் பிள்ளைகளின் அளவு மிக மிகக் குறைவுதான். வீட்டிலிருந்து பாடசாலை வரை அனைத்து இடங்களிலும் அவர்கள் பாதிக்கப்பட்டுகொண்டுதான் இருக்கின்றார்கள்.

குற்றவாளிகளுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளில்கூட குற்றவாளிகள் பெரியவர்களாகவும் மற்றும் செல்வாக்குமிக்கவர்களாகவும் இருப்பதன் காரணமாக பல துஷ்பிரயோகங்கள் நீதிமன்ற வாசலுக்கே வராது சென்று விடுகின்றன.

சட்டங்கள் சிறப்பாக இருப்பது முக்கியம். அதேபோல் அதனைச் சிறப்பாக நடைமுறைப்படுத்துதல் மற்றும் அதனை ஏற்றுக்கொண்டு நடத்தல் என்பன மிக முக்கியமான செயற்பாடுகளாகும்.

உலகத்தில் மிகச்சிறந்த நாடு எதுவென்றால் சிறுவர்கள் மிகவும் பாதுகாப்போடு வளரக்கூடிய சூழலை எந்த நாடு கொண்டிருக்கின்றதோ அந்த நாடாகத்தான் இருக்க முடியும்.

அன்பான பெற்றோர்கள், உயர்த்தி விடும் தியாக எண்ணம் கொண்ட ஆசிரியர்கள், மிகச்சிறந்த அரச தரப்பினர், நம்பிக்கை தரும் நண்பர்கள் போன்றவர்களால் கட்டமைக்கப்படும் சூழல் சிறுவர்கள் வாழ்வதற்கேற்ற மிகச்சிறந்த சமுதாயமாக இருக்கும்.

இவ்வாறானதொரு சமூகமே எமது குழந்தைகளது மிகச் சிறந்த கனவாகவிருக்கும். இதனை உருவாக்கித் தர முயல்வது அனைவரதும் கடப்பாடாகும்.

மேலும், சிறுவர் உரிமைக்கான சட்டங்களையும் மதித்து அவர்களுக்கான சுதந்திரங்கள், பாதுகாப்புகளை வழங்கி அவர்களைச் சிறப்பாக வாழ வைத்தால் ஒவ்வொரு நாளுமே சிறுவர் தினம்தான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *