ரஜினியின் அண்ணாத்த படத்தில் அறிமுகமாகும் இலங்கை கலைஞர்!

ரஜினியின் நடிப்பில் தீபாவளியன்று வெளியாகும் “அண்ணாத்த” படத்தில் அறிமுகமாகி இருக்கிறார் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நாதஸ்வரக் கலைஞரான கே.பி.குமரன்.

தீபாவளிக்கு சரவெடியாய் வருகிறது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 168வது படம் ‘அண்ணாத்த’.

சன் பிக்சர்ஸ் தயாரி்ப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான இப்படத்தில், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு என நட்சத்திர பட்டாளமே களமிறங்கியுள்ளது.

டி.இமானின் இசையமைப்பில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நாதஸ்வரக் கலைஞரான கே.பி.குமரன் அறிமுகமாகியுள்ளார்.

யார் இவர்?

யாழ்ப்பாணம் மாவட்டம், கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கலைப் பாரம்பரியத்தைச் சேர்ந்த நாதஸ்வர சகோதரர்கள் பஞ்சமூர்த்தி, கானமூர்த்தி.

இதில் பஞ்சமூர்த்தியின் இளைய மகன்தான் கே.பி. குமரன், தனது தந்தையிடமிருந்து முறைப்படி கர்நாடக சங்கீதத்தையும், நாதஸ்வரத்தையும் கற்றுக்கொண்டார்.

அத்துடன் தன் தந்தையுடன் இணைந்து கோவில்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று அசத்தினார்.

தொடர்ந்து புலம்பெயர் நாடுகளில் குறிப்பாக எம்மக்கள் வசிக்கும் நாடுகளில் நடைபெற்ற கச்சேரிகளில் கலந்து கொண்டதுடன், தனிப்பட்ட திறமையால் முன்னணி இசைக்கலைஞராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இலங்கையில் இவருக்கு பலத்த வரவேற்பு இருந்த போதும், தற்போது முதன்முறையாக தமிழ் திரைப்படத்தில் அறிமுகமாகி இருக்கிறார்.

இதனால் ஈழத்தமிழர்கள் மத்தியில் அண்ணாத்த படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *