ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி குறித்து ஜம்இய்யத்துல் உலமாவின் நிலைப்பாடு!

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டிருப்பதை அறிந்து நாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டிருப்பதை அறிந்து நாம் அதிர்ச்சியடைந்துள்ளோம். அண்மைக் காலமாக இத்தலைப்பு பொதுத் தலங்களில் பேசுபொருளாக காணப்பட்டு வருகின்றது. இலங்கையில் வாழக்கூடிய சகல பிரஜைகளும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் யாப்பிற்கு அமைய, ஒரே நாடு ஒரே மக்கள் என்ற அமைப்பில், பல நூற்றாண்டுகள் அவரவரது மத விழுமியங்களையும் கலாச்சாரங்களையும் பேணி, மதச் சுதந்திரத்தின் அடிப்படையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

மதங்களை மதித்து நடக்கக்கூடிய மதத்தலைவர்கள் பலர் வாழும் நம் நாட்டில், மதநிந்தனைகளில் ஈடுபட்டு முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்திக் கொண்டிருக்கும் சர்ச்சைக்குரிய ஒருவர் பொறுப்பான ஒரு பதவிக்கு நியமிக்கப்பட்டிருப்பதையிட்டு நாம் கவலையும் அதிருப்தியும் அடைகின்றோம்.

இதன் மூலம் முஸ்லிம்கள் பல வழிகளில் பாதிக்கப்படுவார்கள் என்ற அச்சம் முஸ்லிம்களுக்கு மத்தியில் எழுந்துள்ளது.

இந்நியமனம் சர்வதேச மட்டத்தில் நம் நாட்டுக்கு அகௌரவத்தைக் கொண்டு வரும் ஒரு விடயமாகவும் அமைந்துள்ளது.

நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் அமைதி, சமாதானம், சுபீட்சம், ஆரோக்கியம் மற்றும் அபிவிருத்தி ஏற்பட்டு எல்லோரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *