நாய்க்கு சிலை வைத்து வழிபடும் அதிசய மக்கள்!

இந்தியாவில் நாய்க்கு சிலை வைத்து வழிபாடு நடத்தும் அதிசய சம்பவம் நடந்து வருகிறது.

பெங்களூருவுக்கு அருகே அமைந்துள்ளது ராம் நகரம், இம்மாவட்டத்தின் சென்னபட்டணா தாலுகாவில் அக்ரஹாரா வளகெரேஹள்ளி கிராமம் உள்ளது.

இக்கிராமத்தின் காவல் தெய்வமாக வீரமாஸ்தி கெம்பம்மா உள்ளார். ஆனால் இக்கோயில் அருகில் ‘நாயிதொளவீரப்பா’ என்ற பெயரில் நாய்க்கு கோயில் கட்டி சிலை வைத்து வழிபாடு நடத்துவதுடன், ஆண்டுதோறும் விமர்சையாக விழாவும் நடத்தி வருகிறார்கள்.

புராண கதை

கடந்த சில நூற்றாண்டுகளுக்கு முன் ஆடு மேய்க்கும் பெண் ஒருவர் தனது ஆடுகளுக்கு பாதுகாப்பாக இரண்டு நாய்கள் உடன் அழைத்து சென்றுள்ளார்.

அக்ரஹாரா வளகெரேஹள்ளி கிராமத்தில் ஆடு மேய்த்த பிறகு, பகல் நேரத்தில் வெயில் கொடுமை தாங்காமல், கிராம தேவதையான வீரமாஸ்தி கெம்பம்மா கோயில் வளாகத்தில் நாய்களை கட்டிவைத்துவிட்டு படுத்து தூங்கியுள்ளார்.

தூக்கத்துக்கு பிறகு கண் விழித்தபோது கட்டிவைத்த நாய்கள் காணாமல் போய்விட்டது. இதை பார்த்து கண்ணீர் விட்ட பெண், கிராம தேவதையிடம் நாய்களை கண்டுபிடித்து கொடுக்கும்படி வேண்டினார்.

அன்றிரவு தூங்கி கொண்டிருக்கும்போது, பெண்ணின் கனவில் வந்த கிராம தேவதை, நாய்களை தான் எடுத்து கொண்டதாகவும், அவற்றுக்கு கோயில் கட்டி வழிபாடு நடத்தினால், அனைத்து நன்மையும் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

தான் கனவில் கண்டதை மறுநாள் கிராமத்தினரிடம் அப்பெண் கூறினார். இதை ஏற்றுக்கொண்ட மக்கள் நாய்க்கு சிலை வடித்து அழகான கோயில் கட்டி பிரதிஷ்டை செய்து அதற்கு ‘நாயிதொளவீரப்பசாமி’ என்று பெயர் வைத்து வழிபட தொடங்கினர்.

பல ஆண்டுகளாக இந்த சம்பிரதாயமும் வழிபாடும் தொடர்ந்து வருகிறது.

ஆண்டுதோறும் விழாவின் போது நாயிதொள வீரப்பசாமிக்கு பட்டு வேட்டி, பட்டு சட்டை உடுக்கை, மஞ்சள், குங்குமம் வைத்து பூஜையும் நடத்தப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *