இலங்கையை அடித்து நொறுக்கியது அவுஸ்திரேலியா!

ஆஸ்திரேலியா அணிக்கெதிரான போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

உலகக்கோப்பை டி20 தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன் படி முதலில் ஆடிய இலங்கை அணிக்கு துவக்க வீரரான பதும் நிசன்கா 7 ஓட்டங்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

அதன் பின் வந்த சரித் அசலன்கா, குசால் பெரேராவுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை கொடுத்தார்.

இந்த ஜோடி ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை சிறப்பாக எதிர் கொண்டது. அணியின் எண்ணிக்கை 78-ஐ தொட்ட போது சரித் அசல்ன்கா 35 ஓட்டங்களுடன் ஜாம்பா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து குசால் பெரேராவும்(35), ஜம்பா பந்து வீச்சில் ஆட்டமிழக்க, இலங்கை அணியின் ரன் விகிதம் குறைய துவங்கியது.

இருப்பினும் கடைசி கட்டத்தில் பனுகா ராஜபாக்ச அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், இறுதியாக இலங்கை அணி 20 ஓவர் முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 154 ஓட்டங்கள் எடுத்தது.

கடைசி வரை ஆட்டமிழக்காமல் பனுகா ராஜபாக்ச 26 பந்தில் 33 ஓட்டங்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக மிட்சல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் மற்றும் ஆடம் ஜாம்பா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

அதன் பின் 155 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு துவக்க வீரர்களான ஆரோன் பின்ச் மற்றும் டேவிட் வார்னர் சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 70 ஓட்டங்கள் குவித்த நிலையில், ஆரோன் பின்ச் 37 ஓட்டங்களில் வஹிண்டு ஹசரங்கா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இருப்பினும் மற்றொரு துவக்க வீரரான டேவிட் வார்னர் இலங்கை அணியின் பந்து வீச்சை அடித்து ஆடினார்.

இவரை வீழ்த்த முடியாமல் இலங்கை வீரர்கள் திணறினர். மறும் புறம் வந்த மேக்ஸ்வேல்ஸ் 5 ஓட்டங்களில் வெளியேற, ஸ்டீவ் ஸ்மித், வார்னருடன் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஆஸ்திரேலியா அணி வெற்றியை நெருங்கிக் கொண்டிருந்த போது, டேவிட் வார்னர் 42 பந்தில் 65 ஓட்டங்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். இறுதியாக ஆஸ்திரேலியா அணி 17 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 155 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியை பொறுத்தவரை இலங்கை பந்து வீச்சாளர்கள் அந்தளவிற்கு அற்புதமாக பந்து வீசவில்லை. வஹிண்டு ஹசரங்கா மட்டுமே ஆஸ்திரேலியாவுக்கு ஒரு தொந்தரவு கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *