டெம்பிள்டன் விருது வென்ற சிம்பன்ஸி ஆய்வாளர்!

“நான் மனித இயல்பின் இரு பக்கங்களையும் கற்றுக்கொண்டேன். சிலர் சாத்தியமற்ற பணிகளைப் பொறுப்பேற்று செய்துமுடிக்கின்றனர். நம்முடைய மூளையும் இதயமும் இணையும்போது மனிதர்களின் நிஜமான திறன் வெளிப்படுகிறது” என்கிறார் சிம்பன்ஸிகளின் தோழர் ஜேன் குட்டால்.

உலகப் புகழ்பெற்ற சிம்பன்ஸி ஆய்வாளர், வனவுயிர் பாதுகாப்பு நிபுணர் மற்றும் சுற்றுச்சூழல் வல்லுநரான ஜேன் குட்டால், 2021 ஆம் ஆண்டுக்கான டெம்பிள்டன் பரிசை வென்றுள்ளார்.

இயற்கையைப் பாதுகாப்பதில் தொடர்ந்து போராடிவரும் ஜேன் குட்டாலின் பணிகளைப் பாராட்டி விருது வழங்கப்பட்டுள்ளது.

“பிரபஞ்சத்தின் ஆழமான கேள்விகள் மற்றும் மனிதகுலத்தின் இடம் மற்றும் நோக்கம் ஆகியவற்றை அறிய அறிவியலின் சக்தியைப் பயன்படுத்துதல்” என்று டெம்பிள்டன் விருதுக்கான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே டெம்பிள்டன் பரிசை வென்ற டெஸ்மாண்ட் டுட்டூ (2013), தலாய் லாமா (2012) ஆகியோர் வரிசையில் ஜேன் குட்டாலும் இணைந்துள்ளார்.

விலங்குகளின் நுண்ணறிவு மற்றும் தன்னைச் சுற்றியுள்ள உயிர்கள் மற்றும் சுற்றுச்சூழலுடன் மனித குலம் எப்படி தொடர்புடன் இருக்கிறது என்பதைப் பற்றிய அவரது அறிவியல் மற்றும் ஆன்மிக ஆர்வத்திற்காக விருது வழங்கப்பட்டுள்ளது.

“டாக்டர் ஜேன் குட்டாலுக்கு விருது வழங்கியதில் பெருமை அடைகிறோம். ஏனெனில் அவரது சாதனைகள், அறிவியல் ஆய்வின் பாரம்பரிய விதிமுறைகளைத் தாண்டி மனிதனாக இருப்பதன் அர்த்தம் குறித்த நமது கருத்தை வலியுறுத்துகின்றன” என்று பாராட்டியுள்ளார் ஜான் டென்பிள்டன் பவுண்டேசன் தலைவர் ஹீதர் டெம்பிள்டன்.

இந்த ஆய்வாளரின் கண்டுபிடிப்புகள் விலங்கு நுண்ணறிவு பற்றிய உலகின் பார்வையை முழுமையாக மாற்றியமைத்துள்ளன. மனிதகுலத்தைப் பற்றிய நமது புரிதலையும் அவை வளப்படுத்தியுள்ளன.

“என் தாத்தா ஜான் டெம்பிள்டன், தன் வாழ்நாளில் எழுதிய மற்றும் பேசிய தன்னடக்கம், ஆன்மீக ஆர்வம் மற்றும் கண்டுபிடிப்பு ஆகியவற்றை ஜேன் குட்டாலின் பணிகள் எடுத்துக்காட்டுகின்றன” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெரும் முதலீட்டாளரும், கொடையுள்ளம் படைத்தவருமான ஜான் டெம்பிள்டன். 1954 ஆம் ஆண்டு டென்பிள்டன் வளர்ச்சி நிதி என்ற மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தைத் தொடங்கினார்.

தன் வாழ்நாளில் அவர் 1 பில்லியன் டாலருக்கும் அதிகமாக நற்காரியங்களுக்காக நன்கொடை வழங்கினார்.

ஜான் டெம்பிள்டன் பவுண்டேசன் மூலம் சர்வதசே அளவில் மனிதகுலத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபடுபவர்களுக்கு டெம்பிள்டன் விருது வழங்கப்படுகிறது.

பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வித்தியாசமானவர் ஜேன் குட்டால். அவர் மதவாதியல்ல. கிறித்தவக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவரான அவர் தன்னை ஒர் ஆன்மிகவாதியாகவே அடையாளம் காட்டுகிறார்.

அந்த தனித்துவமான பார்வை தான்சானியா காடுகளில் வாழ்ந்த சிம்பன்ஸிகளை ஆராய்ந்தபோது அவருக்கு ஏற்பட்டது.

“மழைக்காடுகளில்தான் நான் அனைத்து உயிரினங்கள் ஒவ்வொன்றுக்குமான தொடர்பு பற்றி கற்றுக் கொண்டேன். ஒவ்வொரு உயிரினத்துக்கும் தனி பங்கு இருக்கிறது.

எனக்கு இயற்கை உலகுடன் அழுத்தமான ஆன்மிகரீதியான தொடர்பு இருக்கிறது” என்று விருது பெற்றுக்கொண்ட தருணத்தில் ஜேன் குட்டால் பேசினார்.

பல மதத்தலைவர்கள் தங்கள் மத நம்பிக்கைகளின் ஒரு பகுதியாக இயற்கையைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்துப் பேசவேண்டிய அவசியத்தை குட்டாலுக்குக் கிடைத்த விருது வலியுறுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *