தென்னாப்பிரிக்கா அணி அபார வெற்றி!

டி20 உலகக்கோப்பை தொடரில் மேற்கிந்திய தீவு அணிக்கெதிரான ஆட்டத்தில், தென் ஆப்பிரிக்கா அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 போட்டிக்கான இன்றைய ஆட்டத்தில் மேற்கிந்திய தீவு மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

இதற்கு முந்தைய போட்டியில் மேற்கிந்திய தீவு அணி இங்கிலாந்து அணியிடமும், தென்னாப்ரிக்க அணி அதன் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடமும் தோல்வியை தழுவின. இதனால் முதல் வெற்றியை பெறும் முனைப்பில் இரு அணிகளும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதன் படி டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. மேற்கிந்திய தீவுக்கு லென்டில் சிம்மன்ஸ்- எவின் லீவிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

சிம்மன்ஸ் நிதானமாக விளையாட எவின் லீவிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். லீவிஸ் 35 பந்தில் 56 ஓட்டங்கள் விளாசினார். அவர் ஆட்டமிழக்கும்போது மேற்கிந்திய தீவு அணி 10.3 ஓவரில் 73 ஓட்டங்கள் குவித்திருந்தது.

இதனால் 20 ஓவரில் 150 ஓட்டங்களை எளிதாக தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிம்மன்ஸ் 35 பந்தில் 16 ஓட்டங்களும், பூரன் 7 பந்தில் 12 ஓட்டங்களும், கிறிஸ் கெய்ல் 12 பந்தில் 12 ஓட்டங்களும், பொல்லார்டு 20 பந்தில் 26 ஓட்டங்களும், அந்த்ரே ரஸல் 4 பந்தில் 5 ஓட்டங்களும் மட்டுமே அடித்து ஏமாற்றம் அளித்தனர்.

இதனால் மேற்கிந்திய தீவு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 143 ஓட்டங்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. தென் ஆப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக டேவைன் பெட்ரியஸ் 4 ஓவர்கள் வீசி 17 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

144 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு, டெம்பா பவுமா 2 ஓட்டங்களில் ரன் அவுட் ஆக, அதன் பின் வந்த ரசி வென் டர் டுசைனுடன் ஜோடி சேர்ந்த ரீஜா ஹெண்ட்ரிக்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த, தென் ஆப்பிரிக்கா அணியின் ரன் விகிதம் சீரான வேகத்தில் எகிறியது.

இவர்களின் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் மேற்கிந்திய தீவு அணி வீரர்கள் திணறினர். அணியின் எண்ணிக்கை 61-ஆக இருந்த போது, மேற்கிந்திய தீவு அணியின் சுழற்பந்து வீச்சாளரான அகில் ஹொசைன் ரீஜா ஹெண்ட்ரிக்ஸை 39 ஓட்டங்களில் அவுட் ஆக்கினார்.

இருப்பினும் தென் ஆப்பிரிக்கா அணி இறுதியாக 18.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 144 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஏற்கனவே மேற்கிந்திய தீவு அணி, இங்கிலாந்திடம் தோல்வியடைந்துள்ளதால், தற்போது தென் ஆப்பிரிக்காவிடமும் தோல்வி என அடுத்தடுத்து இரண்டு தோல்விகளைசந்தித்துள்ள மேற்கிந்திய தீவு அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவது இனி கஷ்டமே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *