இலங்கை மக்களுக்கு உண்ண உணவும் இல்லாமல் போகும் நிலை ஏற்படும் ஹிருணிகா தெரிவிப்பு!

இலங்கையின் தற்போதைய ஆட்சியின் கீழ் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டளவில் நாட்டு மக்களுக்கு சாப்பிட உணவும் இல்லாமல் போகும் நிலைமை ஏற்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

தான் ஆரம்பத்தில் கூறிய எதிர்வுகூறல்கள் தற்போது உண்மையாகி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தமக்கு சேதனப் பசளை வேண்டாம் என கமத்தொழிலாளர்கள் கூறுகின்றனர். எமக்கு உங்களது இலவச பசளை பொதி தேவையில்லை. கடைகளுக்கு பசளைகளை விநியோகியுங்கள் நாங்கள் பணத்தை கொடுத்து பசளைகளை கொள்வனவு செய்கிறோம் என கமத்தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

மக்கள் பால் மாவை கொள்வனவு செய்ய தற்போதும் வரிசையில் நிற்கின்றனர். அரசாங்கம் அவற்றை உணரவில்லை என்றால், அரசாங்கத்திற்கு தொழு நோய் ஏற்பட்டுள்ளது என்றே அர்த்தம். 2022 ஆம் ஆண்டளவில் சாப்பிடவும் முடியாமல் போகும் என நான் அன்று கூறினேன்.

தற்போது இறுதி காலத்தை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கின்றனர். மக்களுக்கு உண்ண உணவில்லை. குடிக்க நீரில்லை. சமைக்க சமையல் எரிவாயு இல்லை. அத்துடன் பெட்ரோலும் இல்லை. மக்கள் தற்போது பொம்மைகள் மீதே தாக்குதல் நடத்துகின்றனர்.

உண்மையில் எதிர்காலத்தில் ராஜபக்சவினர் வெளியில் இறங்கி வீதியில் செல்ல முடியாமல் போகும். ராஜபக்ச என்ற பரம்பரை பெயரை கேட்டால் வீதியில் செல்லும் சாதாரண நபர்களையும் மக்கள் தாக்குவார்கள். அந்தளவுக்கு ராஜபக்ச என்ற பெயர் அழிந்து போய்விட்டது என ஹிருணிகா பிரேமச்சந்திர குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *