மேற்கத்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி!

டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக இன்று நடைபெற்றப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிப்பெற்றது இங்கிலாந்து.

துபாயில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய மேற்கத்திய தீவுகள் பேட்ஸ்மேன்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தொடக்க வீரர்கள் சிம்மன்ஸ், எவின் லீவிஸ் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்பு அடுத்தடுத்து வந்த ஹெட்மயர், பிராவோ, பூரண், பொல்லாப்ட், ரசல் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களுடன் பெவிலியனுக்கு நடையைகட்டினர்.

மேற்கத்திய தீவுகள் அணியில் அதிகபட்சமாக கிறிஸ் கெயில் மட்டுமே 13 ரன்களை சேர்த்தார். இதனையடுத்து மேற்கத்திய தீவுகள் அணி 14.2 ஓவரில் 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷீத் 3 விக்கெட்டையும், மொயின் அலி, டைமல் மில்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இப்போது எளிதான இலக்கை எட்டி வெற்றிப்பெற இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் களமிறங்கினர். தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர், ஜேசன் ராய் களமிறங்கினர்.

இதில் ஜேசன் ராய், பேர்ஸ்டோ மற்றும் மொயின் அலி, லிவிங்ஸ்டோன் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு அவுட்டாகினர். எளிய இலக்குதான் என்றாலும் மேற்கத்திய தீவுகள் அணியின் சுழற்பந்துவீச்சாளர் அகேல் ஹூசைன் பந்துவீச்சை எதிர்கொள்ள இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் திணறினர். ஆனாலும் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய பட்லர் மற்றும் அவருடன் ஜோடி கேப்டன் மார்கன் ஆகியோர் ஆட்டமிழக்காமல் வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயித்த எளிதான இலக்கை 8.2 ஓவரில் எட்டினர். இதனையடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றிப்பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *