நீங்கள் கிரெடிட் கார்ட் பயன்படுத்துபவர்களா? அப்படி இருந்தால் இந்த தவறை செய்யாதீர்கள்

நீங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்துகிறவராக இருந்தால், கீழே சொல்லப்பட்டுள்ள தவறுகளைச் செய்கிறீர்களா எனப் பாருங்கள். இந்தத் தவறுகளை எல்லாம் செய்கிறீர்கள் எனில், உடனே திருத்திக் கொள்ளுங்கள்.

பொது இடங்களில் கிரெடிட் கார்டு!

நீங்கள் உங்களுடைய கிரெடிட் கார்டு விவரங்களை வெளியிடுவதில் கொஞ்சம்கூட கவனமாக இல்லாமல் இருக்கிறீர்கள் எனில், இந்த கார்டைப் பயன்படுத்த நீங்கள் தகுதியானவர் அல்ல என அர்த்தம். வங்கி சார்ந்த விவரங்கள் எதுவாக இருந்தாலும், அதை வெளியிடக் கூடாது என்பதுதான் பொதுவான விதி. ஆனால், நம்மில் பலர் தெரிந்தோ, தெரியாமலோ கிரெடிட் கார்டு விவரங்களை அடுத்தவர்களிடம் பகிர்ந்துகொள்கிறோம். மற்ற கார்டு விவரங்களைப் போல, இந்த கார்டு விவரங்களையும் பாதுகாப்பதும் அவசியம்.

கிரெடிட் கார்டு பில்

பெட்ரோல் நிலையங்கள், ரெஸ்டாரன்ட்டுகள் போன்ற பொது இடங்களில் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தும்போதுதான், அது சார்ந்த விவரங்கள் அதிக அளவில் களவாடப்படுகின்றன. அதனால், பொது இடங்களில் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தும்போது முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்வது முக்கியம். குறிப்பாக, வங்கிகளிலிருந்து யாரும் கார்டு விவரங்களைக் கேட்டு போன் செய்ய மாட்டார்கள் என்பதில் தெளிவாக இருங்கள். ஏனெனில், சமீப காலமாக கிரெடிட் கார்டுகளைக் குறிவைத்து போன் அழைப்புகள் வர ஆரம்பித்திருக்கின்றன.

தவணைக் காலம்!

கடன் கொடுத்தவர் யாராக இருந்தாலும், உரிய நேரத்தில் தவணைத் தொகையைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். கிரெடிட் கார்டு விஷயத்திலும் அப்படித்தான். தவணைத் தொகைக்கான தேதியை, ஒவ்வொரு கிரெடிட் கார்டு நிறுவனமும் மெயில் மூலமாகவும், எஸ்.எம்.எஸ் மூலமாகவும் அல்லது போன் அழைப்பின் மூலமாகவும் உரியவர்களுக்குத் தெரியப்படுத்தும். இந்தக் கெடுகாலத்துக்குள் தவறவிடாமல், பணத்தைச் செலுத்துவது நல்லது. அப்படியில்லாமல், தவணைத்தொகை செலுத்துவதைத் தள்ளிப்போட்டுக்கொண்டே இருக்கிறீர்கள் எனில், நீங்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்துவது சரியாக இல்லை எனக்கொள்ளலாம்.

கிரெடிட் கார்டில் இருந்து பணத்தை எடுப்பது!

நீங்கள் உங்களுடைய அவசரத் தேவைக்காக கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி பணத்தை எடுக்கிறீர்கள் எனில், நீங்கள் இதைப் பயன்படுத்துவதற்கு பொருத்தமான ஆள் கிடையாது. இன்று, பெரும்பாலான வங்கிகள் கிரெடிட் கார்டிலிருந்து பணத்தை மொபைல் வாலட்களுக்கும் அல்லது மற்றொரு வங்கிக்கணக்குக்கும் பரிமாற்றம் செய்வதை ஊக்குவிக்கின்றன. ஏனெனில், கிரெடிட் கார்டிலிருந்து எடுத்துப் பயன்படுத்தும் தொகைக்கு வட்டி விகிதம் அதிகம்.

இது தெரியாமல் பலரும் அவசரப் பணத்தேவைக்காக கிரெடிட் கார்டிலிருந்து பணத்தை எடுக்கிறார்கள். `பணத்தைக் கையாள்வதில் செய்யக்கூடாத விஷயங்கள்’ எனச் சில இருக்கின்றன. அதில் கிரெடிட் கார்டுகளிலிருந்து பணத்தை எடுத்துப் பயன்படுத்தாமல் இருப்பது மிக முக்கியமானது.

கிரெடிட் கார்டு லிமிட்!

உங்களுக்குக் கொடுக்கப்பட்டிக்கும் கிரெடிட் லிமிட் முழுவதையும் பயன்படுத்துபவராக இருந்தால், இனிமேல் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தாதீர்கள். கொடுக்கப்பட்டிருக்கும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தும் சுதந்திரம் முழுவதுமாக உங்களுக்கு இருந்தாலும் அதற்காக லிமிட் முழுவதையும் பயன்படுத்தும்போது, உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படும். அதுமட்டுமல்லாமல், கார்டு டிஃபால்ட் ஆவதற்கும் வாய்ப்புகள் அதிகம்.

ரிவார்டு பாயின்ட்களுக்காக கிரெடிட் கார்டு!

கிரெடிட் கார்டுகள் மூலம் செய்யும் செலவுகள் ஒவ்வொன்றுக்கும் ரிவார்டு பாயின்ட்டுகளை வழங்குவது வங்கிகளின் வழக்கமான செயல். அந்த ரிவார்டு பாயின்டுகளைப் பெறுவதற்காகவே நம்மில் பலர் அதைப் பயன்படுத்திவருகிறோம். அதில் ஒருவராக நீங்களும் இருந்தால், இந்த கார்டு பயன்படுத்தும் தகுதியை இழக்கிறீர்கள். ஏனெனில், 5,000 பாயின்டுகளில் கிடைக்கக்கூடிய ஒரு பொருள், சில ஆண்டுகளில் 7,000 பாயின்ட் இருந்தால்தான் கிடைக்கும் என்றாகிவிடும். இந்த உத்தியானது உங்களுடைய கிரெடிட் கார்டு பயன்பாட்டை அதிகப்படுத்தத்தானே தவிர, சலுகைகள் வழங்குவதற்காக அல்ல.

ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டுகள்!

கிரெடிட் கார்டுகளை வாங்கச் சொல்லி ஒரு நாளைக்கு நான்கு போன் அழைப்புகள் வந்து விடுகின்றன. கிரெடிட் கார்டு வேண்டாம் என்று சொன்னாலும், அதில் இருக்கும் ஆஃபர்களை எடுத்துச் சொல்லி மக்களை வாங்க அவர்கள் தூண்டுகிறார்கள். இந்த மாய வலையில் சிக்கும் சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை வாங்கி பயன்படுத்த ஆரம்பித்து, பிறகு கடன் பிரச்னையில் சிக்கிக் கொள்கிறார்கள். கிரெடிட் கார்டுகளை சரியாக பயன்படுத்த தெரிந்தவராக இருந்தாலும், ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை பயன்படுத்த வேண்டாம்.

கடன் வாங்கி கிரெடிட் கார்டு தவணையை அடைப்பது!

கிரெடிட் கார்டுகளைப் பொருத்தவரை சரியான தவணைத் தேதியில் தவணையை செலுத்த முடியாமல் போனால், அதிக அளவில் வட்டி செலுத்த வேண்டியிருக்கும். இந்த அதிக வட்டிப் பிரச்னையில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காக, தவணையை கட்ட கையில் தொகை இல்லை என்றாலும், கடன் வாங்கி அதை செலுத்துகிற பழக்கம் பலரிடமும் இருக்கிறது. இந்தப் போக்கு தவறானது.

கடன் கட்ட கடன் என்கிற பழக்கம் அதிகரிக்கும் போது, அது நிதி வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். தவணையை சரியாக செலுத்த முடியாமல் போனால், கிரெடிட் கார்டு பயன்படுத்தும் தகுதி உங்களுக்கு இல்லை என்பதைப் புரிந்து கொண்டு, கிரெடிட்கார்டுகளை சரண்டர் செய்வதுதான் நல்லது.   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *