அரசியல்வாதியை மிஞ்சிய சுங்கத்துறை அதிகாரி 6 மாதத்தில் அதிக சொத்து சேகரிப்பில் கைது!

ஆறு மாதத்தில் வருமானத்தை மீறி 1851% சொத்து குவித்த சுங்கத்துறை அதிகாரி மனைவியுடன் கைது செய்யப்பட்டார். சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை ஏர்இண்டலிஜென்ட் யூனிட்டில் சூப்பிரெண்டாக பணியாற்றுபவர் முகமது இர்பான். இவர், இந்த ஆண்டு ஜனவரி 19ம் தேதி சென்னையிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பெங்களூரு சென்றார். அவருடன் மனைவி தஷிம் மும்தாஜூம் சென்றார். இவர்களின் சொந்த ஊரான லக்னோ செல்ல, அப்போதைய கொரோனா காலத்தில் சென்னையிலிருந்து நேரடி விமானம் இல்லை. எனவே பெங்களூரு சென்று அங்கிருந்து மற்றொரு விமானத்தில் லக்னோ செல்ல இருந்தனர்.  பெங்களூரு விமான நிலையத்தில் விமானம் மாறும்போது அங்கு பணியிலிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், சுங்க அதிகாரி முகமது இர்பான், அவருடைய மனைவி சூட்கேஸ், பைகளை சோதனையிட்டனர். அப்போது இருவரின் உடமைகளிலும் கட்டுக்கட்டாக பணம், பெருமளவு தங்க நகைகள், விலை உயர்ந்த ஐபோன்கள் இருந்ததை கண்டு பிடித்தனர். இதையடுத்து இருவரையும் நிறுத்திவைத்து முழுமையாக சோதனை நடத்தினர்.

அப்போது, முகமது இர்பானிடமிருந்து 74,81,500 பணம், 5 ஐபோன்கள் இருந்ததை கைப்பற்றினர். அவருடைய மனைவி தஷிம் மும்தாஜிடமிருந்து 64,580 பணம் மற்றும் 2,84,850 மதிப்புடைய தங்க நகைகள் இருந்ததையும் பாதுகாப்பு அதிகாரிகள் கைப்பற்றினர். அதோடு இருவரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது, நகை, பணம் மற்றும் செல்போன்கள் தங்களுக்கு எப்படி வந்தது என்பதுபற்றி கூறமுடியாமல் திணறினர். எனவே இது வருமானத்திற்கு அதிகமாக முறைகேடாக சேர்த்த பணம், நகையாக இருக்கலாம் என்று அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையடுத்து வருமான வரித்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வருமான வரித்துறையினர் சுங்க்துறை அதிகாரி முகமது இர்பான் அவரது மனைவி தஷிம் மும்தாஜ் ஆகியோரிடம் தொடர்ந்து 3 நாட்கள் விசாரணை நடத்தினர். அப்போதும் அவர்களால் அந்த பணம், நகைகளுக்கு சரியான கணக்கை தர முடியவில்லை. இதனால் அவர்கள் இருவர் மீதும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது, சிபிஐ அதிகாரிகள் அதிர்ந்து போகும் அளவுக்கு தகவல்கள் கிடைத்தன.

அது வருமாறு:சென்னை விமான நிலையத்தில் ஏர் இண்டிலிஜென்ட் யூனிட்டில் ஏற்கனவே பிரிவியன்ட் ஆபீசராக இர்பான் பணியாற்றி உள்ளார். அதன்பின்பு சூப்பிரெண்டாக பதவி உயர்வு பெற்று அதே பிரிவில் தொடர்ந்து பணியாற்றி வந்தார். சென்னைக்கு வெளி நாடுகளிலிருந்து வரும் விமான பயணிகளை கண்காணித்து சோதனையிடும் பிரிவில் தொடர்ந்து பணியில் இருந்ததால், கடத்தல் ஆசாமிகளிடம் கையூட்டுகள் பெருமளவு பெற்று இந்த பணம், நகைகள், ஐ போன்களை சேர்த்திருக்கலாம் என்பது தெரியவந்தது. அவ்வாறு சேர்த்த பணம், நகைகளை சொந்த ஊருக்கு எடுத்து சென்றபோது, எதிர்பாராத விதமாக பெங்களூரு உள்நாட்டு விமான நிலையத்தில் கணவன், மனைவி இருவரும் சிக்கிக்கொண்டுள்ளனர்.

இதையடுத்து வருமானவரித்துறையினர் விரிவான ஆய்வில் சுங்க அதிகாரி முகமது இர்பான், 2020 ஜூலை மாதத்திலிருந்து 2021 ஜனவரி மாதம் வரை 6 மாதங்களில் மட்டும் வருமானத்திற்கு அதிகமாக 1851% சொத்து குவித்திருப்பது தெரியவந்தது. எனவே, வருமானவரித்துறையினர் கணவன், மனைவியிடமிருந்த பணம், தங்க நகைகள், ஐபோன்களை பறிமுதல் செய்தனர். அதோடு சுங்கத்துறை உயர் அதிகாரிகளுக்கும் விரிவான ரிப்போர்ட் அனுப்பினர். இதையடுத்து சுங்கத்துறை சூப்பிரெண்ட் முகமது இர்பானை சஸ்பெண்ட் செய்து சென்னை சுங்கத்துறை தலைமை ஆணையர் உத்தரவிட்டார். அவர் மீது துறை ரீதியான விசாரணையும் நடந்து வருகிறது.

இந்நிலையில், தற்போது சென்னையில் உள்ள சிபிஐ அதிகாரிகள் இந்த வழக்கு விசாரணையை மேற்கொண்டுள்ளனர். வருமானத்திற்கு அதிகமாக 1851% சொத்து குவித்ததாக சென்னை விமானநிலைய சுங்கத்துறை AIU சூப்பிரெண்டு முகமது இர்பான், அவருடைய மனைவி ஆகியோர் மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து, அதன் நகலை சென்னை சிபிஐ நீதிமன்றத்திற்கு அனுப்பியுள்ளது. சிபிஐ வலையில் சிக்கியுள்ள கணவன், மனைவி இடையே சிபிஐ விசாரணையையும் தொடங்கியுள்ளனர். இதில் சுங்கத்துறை வேறு அதிகாரிகள் யாருக்காவது தொடர் உள்ளதா என்றும் விசாரணை நடக்கிறது. இது, சென்னை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *