மொபைல் போனை அதிகளவில் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியல் வெளியானது!

உலக அளவில் 12 நாடுகளைச் சேர்ந்த மக்கள் சராசரியாக தினசரி 4 மணி நேரம் மொபைல் செயலிகளில் தங்கள் நேரத்தை செலவிடுவதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. ஆப் ஆனி என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின்படி உலக அளவில் அதிக நேர மொபைல் செயலிகளில் தங்கள் நேரத்தை செலவழிக்கும் முதல் 5 நாடுகளில் இந்தியா, தென்கொரியா மற்றும் மெக்சிகோ ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இதில் இந்தியர்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 4.8 மணி நேரம் மொபைல் செயலிகளில் செலவிடுகின்றனர் என்பது தெரியவந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் வரையிலான ஆய்வில் உலக அளவில் 12 நாடுகளைச் சேர்ந்த மக்கள் தினமும் சராசரியாக நான்கு மணி நேரம் மொபைல் செயலிகளில் தங்கள் நேரத்தை செலவிடுவது தெரியவந்துள்ளது.

இது கடந்த ஆண்டை விட அதிகம் ஆகும். ஏனெனில் கடந்த காலாண்டில் 8 நாடுகளை சேர்ந்தவர்கள் தான் மொபைல் செயலிகளில் அதிக நேரத்தை செலவிட்டிருந்தனர். இந்தப் பட்டியலில் இந்தோனேசியா முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தோனேசியர்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 5.5 மணி நேரம் மொபைல் செயலிகளில் செலவிடுகின்றனர். இரண்டாவது இடத்தில் பிரேசில் உள்ளது. பிரேசில் மக்கள் ஒரு நாளைக்கு 5.4 மணி நேரம் செலவிடுகின்றனர். இதேபோல ஜப்பான், கனடா, ரஷ்யா, அமெரிக்கா, துருக்கி, ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் இந்த 12 நாடுகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் தான் ஸ்மார்ட்போன் செயல்களில் அதிக நேரத்தை செலவிடுவதாக ஆப் அனி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா காலகட்டத்தில் OTT உள்ளிட்ட வீடியோ செயலிகளின் பயன்பாடு அதிகமாகி உள்ளது. அதேபோல டிக் டாக் செயலி செப்டம்பர் காலாண்டில் இறுதியில் அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளில் ஒன்றாக உள்ளது. கிட்டத்தட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் இந்த செயலியை பயன்படுத்தி வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் உலக அளவில் 8ல் ஒருவர் டிக் டாக் செயலி உபயோகிக்கிறார் என்று ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

இதேபோல சமூக வலை தளங்களான வாட்ஸ் அப், மெசஞ்சர், ஃபேஸ்புக், டெலிகிராம் மற்றும் வீடியோ கான்பரன்சிங் செயல்களான ஜூம், மைக்ரோசாஃப்டின் டீம் உள்ளிட்டவையும் அதிக அளவில் பயன்படுத்தப்படுவது தெரியவந்துள்ளது. இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் உலக அளவில் பெரும்பாலானோர் தங்களின் பாதி நேரத்தை சமூக ஊடங்களிலேயே செலவிட்டுள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளில் சராசரியாக ஒருவர் தொலைக்காட்சிகளில் செலவிட்ட நேரம் மூன்று மணி நேரமாக இருந்தது. ஆனால் சமீபகாலங்களில் ஒருவர் சராசரியாக 2.5 மணி நேரத்தை மட்டுமே டிவியில் செலவிடுவதும் தெரியவந்துள்ளது. மொபைல் மற்றும் சமூக ஊடகங்களில் பயன்பாடு அதிகமாக அதன் காரணமாக தொலைக்காட்சிகளை மக்கள் பார்ப்பது வெகுவாக குறைந்துள்ளது என்பதை இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *