ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்து கொண்ட காரணம் வெளியானது!

நாட்டையே உலுக்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உள்ள புராரி பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் கடந்த 2018 ஜூலை 1ஆம் திகதி 11 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது. 11 பேருமே தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.
கண்களும், வாயும் துணியால் கட்டப்பட்ட நிலையில் அவர்கள் இருந்தனர். 7 பெண்கள், 4 ஆண்கள் என ஒரு பெரிய குடும்பமே சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இந்தியா மட்டுமின்று உலகத்தில் பல மீடியாக்களிலும் பரபரப்பாகவே பேசப்பட்டது.

இது கொலையா அல்லது தற்கொலையா என பல கோணங்களில் விசாரணை நடந்தது. வீட்டின் வெளியே நீட்டிக்கொண்டிருந்த 11 குழாய்கள், கைப்பற்றப்பட்ட கடிதம், அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்ட வாழ்க்கையின் மறுவாழ்வு, அமானுஷ்யம், மறுபிறவி என அந்த வீட்டில் தொட்டதெல்லாம் மர்மமாகவும், திகிலாகவுமே இருந்தது.

கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளும் அந்த வீட்டுக்குள் யாரும் போகவுமில்லை, அங்கிருந்து யாரும் வெளியே வரவுமில்லை எனக் காட்டியது. அதனால் இது ஒரு தற்கொலை தான் என முடிவுக்கு வந்த பொலிசார், குடும்பத்தினர் அனைவருமே தற்கொலை செய்துகொள்ள என்ன காரணமாக இருக்கலாம் என விசாரணையின் கோணத்தை திருப்பினர்.

கிட்டத்தட்ட 3 வருடங்கள் கடந்த விசாரணையில் பொலிசார் முடிவை நெருங்கியுள்ளனர். அவர்கள் எந்த அழுத்தத்தின் காரணமாகவும் தற்கொலை செய்யவில்லை. 2007ம் ஆண்டு இறந்த அந்தக்குடும்பத்தின் தலைவரான போபால் சிங்கின் ஆன்மா அதே குடும்பத்தில் இருக்கும் லலித் என்பவருடன் பேசியதாக அந்தக்குடும்பத்தினர் நம்பியுள்ளனர்.

குடும்பம் சிறப்பாக இருக்க வேண்டுமென்றால் சில அமானுஷ்ய வேலைகளை செய்ய வேண்டுமென போபாலின் ஆன்மா கேட்டுக்கொண்டதாகவும், அதன்படியே அந்த குடும்பத்தினர் அமானுஷ்ய வேலைகளில் இறங்கியதாகவும் கூறப்படுகிறது.

அதன் உச்சமாக, அனைவருமே உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்துள்ளனர். ஆனாலும் சிறிது நேரத்தில் அனைவருமே மீண்டும் உயிர் பெறுவோம் என 11 பேருமே தீர்க்கமாக நம்பியுள்ளனர்.

இறந்துவிட்டாலும் மீண்டும் பூமியில் உயிர்பெறலாம் என்ற மூடநம்பிக்கையை முழுமையாக நம்பிய அவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர். அமானுஷ்யத்தில் ஒரு பகுதியாகவே கண்ணையும், வாயையும் கட்டிக்கொண்டு அவர்கள் உயிரிழந்துள்ளனர்.

அப்படி இறந்தால் மோட்சம் அடையலாம் என்றும் அவர்கள் நம்பியுள்ளனர். அதன்படி இந்த வழக்கின் இறுதி அறிக்கையில் இந்த மரணங்களில் யாருடைய சூழ்ச்சியும் இல்லை, இது தற்கொலை தான் என தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் மறுபிறவி, மோட்சம், சொர்க்கம், அமானுஷ்யம் என இத்தனை விஷயங்களை இவர்கள் மனதில் பதிய வைத்தவர் யார் என்ற விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *