மின்சார கட்டணம் தொடர்பான சலுகைகள்!

நாட்டில் நிலவி வரும் கொவிட் வைரஸ் நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட சுற்றுலா விடுதிகளின், மின்சார கட்டணங்களுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகையை மேலும் குறுகிய காலத்திற்கு நீடிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இது குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, மின்சக்தி அமைச்சருடன் கலந்துரையாட இருப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

கொவிட் வைரஸ் தொற்று பரவல் காரணமாக, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்யப்பட்ட சுற்றுலா விடுதிகள் மற்றும் தங்கும் இடங்களுக்கான மின்சார கட்டணங்களை செலுத்துவதற்கான சலுகை காலம் வழங்கப்பட்டிருந்தது. கால அவகாசம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்துள்ளது.

வீழ்ச்சி அடைந்துள்ள சுற்றுலாத்துறையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு இன்னும் பல மாதங்கள் ஆகலாம், அதனால் இந்த சலுகையை மேலும் நீடித்து தருமாறு சுற்றுலா விடுதி உரிமையாளர்கள் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

இந்த கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, சுற்றுலா விடுதிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் அந்த சலுகையை மேலும் குறுகிய காலத்திற்கு நீடிப்பது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *