சிறையில் உள்ள சாருக்கான் மகன் தெரிவித்துள்ள பரபரப்பு தகவல்!

போதைப்பொருள் தடுப்பு பிரிவினரின் கட்டுப்பாட்டில் உள்ள ஆர்யன் கானுக்கு மருத்துவ ஆலோசனை அளிக்கப்பட்டதாக போதை தடுப்பு பிரிவு அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார். அப்போது, தான் விடுதலை செய்யப்பட்ட பிறகு அனைவரும் பெருமை கொள்ளும் செயல்களைச் செய்வேன் என என்சிபி மண்டல இயக்குநர் சமீர் வான்கடேவிடம் ஆர்யன் கான் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விடுதலைக்குப் பிறகு ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் செயல்படுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இன்னொரு முறை தவறான காரணங்களுக்காகத் தனது பெயர் செய்தித்தாள்களில் வராது என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

போதை பொருள் விவகாரத்தில் ஆர்யன் கானின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தற்போது மும்பை ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆர்யன் கான் கைது செய்யப்பட்ட போது 2 பெண்கள் உட்பட 10 பேர் மொத்தம் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

ஆர்யன் கான் கைது செய்யப்பட்ட போது அவரிடம் எந்தவொரு போதைப்பொருளும் கைப்பற்றப்படவில்லை என்பது உண்மைதான் என்றாலும் கூட அவர் கடந்த சில ஆண்டுகளாகவே போதைப் பொருள்களைப் பயன்படுத்தி வருவதாகவும் சர்வதேச போதைப் பொருள் கும்பலுடன் அவருக்குத் தொடர்பு உள்ளதாகவும் போதைபொருள் தடுப்பு பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

மும்பையை அடுத்த கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசுக் கப்பலில் நடைபெற்ற கேளிக்கை விருந்தின்போது தடை செய்யப்பட்ட போதைப் பொருளை பயன்படுத்தியதாக ஷாருக் கானின் மகன் ஆா்யன் கான் இம்மாதம் 3ஆம் தேதி கைது செய்யப்பட்டு மும்பை சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரும் அவருடன் கைது செய்யப்பட்ட அா்பாஸ் மொ்சன்ட், மூன்மூன் தமேச்சா, நூபுா் சட்டோச்சா, மோகக் ஜெய்ஸ்வால் ஆகியோரும் ஜாமீன் கேட்டு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா். ஆா்யன் கான் உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்க அவா்களைக் கைது செய்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவு சார்பில் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *