சட்டத்தை மாற்றும் ’18’

 

– பஸ்றி ஸீ. ஹனியா
LL.B (Jaffna)

பதினெட்டு வயது என்ற விடயம் வாழ்க்கையில் ஒரு மைல்கல் என்றே கூறலாம்.

சட்டமானது 18 வயதில் பல பெரிய பொறுப்புகளைத் தலையின் மேல் திணித்து விடுகின்றது. மேலும் தனியாக – ஒரு மனிதனாக சமூகத்தில் உலாவுகின்ற அங்கீகாரத்தையும் இந்த 18 வயதில் வழங்குகின்றது.

ஒரு பிள்ளை 17 வயது 11 மாதங்கள் 29 நாட்கள் 23 மணித்தியாலங்கள் 59 செக்கன்களில் இருக்கும் முதிர்ச்சியை விட ஒரு செக்கன் தாண்டி 18 வயதை அடைந்து விட்டால் முதிர்ச்சி, பக்குவம்  உடையவராக மாறி விடலாமா? என்ற வினா நிச்சயமாக விவாதத்துக்குரியது.

எது எதுவாக இருந்தபோதிலும் சிறுவர்கள் என்ற பராயத்தைத் தாண்டித் தனிமனிதனாக நாட்டின் பொறுப்புக்களையும், தனது பொறுப்புகளையும் தன்னுள்ளே எடுப்பதற்கு 18 வயது ஒரு திறவுகோல்.

இங்கு ஒரு பிள்ளைக்கு 18 வயதுக்கு முன் ஒரு சில சட்டங்களும், 18 வயதுக்குப் பின் ஒரு சில சட்டங்களுமாக சட்டத்திலேயே இருவேறு பாகுபாடுகள் உள்ளன.

அந்தவகையிலே 18 வயதுக்குட்பட்ட பிள்ளையின் தனியாக நிற்கும் தற்துணிவு அதிகாரத்தை சட்டமானது பிள்ளைக்கு வழங்கவில்லை. அந்த அதிகாரத்தை 18 வயது குறைந்த பிள்ளையின் பாதுகாவலருக்கே வழங்கியுள்ளது.

தண்டனைச் சட்டக்கோவை 8 வயதுக்குக் குறைந்த ஒரு பிள்ளை மீது குற்றப் பொறுப்புடைமையைச் சுமத்த மறுக்கின்றது. மேலும், 8 வயது தொடக்கம் 12 வயதுக்கு இடைப்பட்ட பிள்ளை தொடர்பில் பிள்ளையின் விளைவை விளங்கிக் கொள்ளும் தன்மை தொடர்பாக ஆராய்ந்து குற்றப் பொறுப்புடைமையானது சுமத்தப்படுகின்றது.

மேலும், பராயம் அடையாதவர்கள்  வேலைக்கு அமர்த்தல் குற்றமாக்கப்பட்டு 14 வயதுக்கு மேல் வேலையின் தன்மை, கடமையின்போது ஏற்படுகின்ற ஆபத்துக்கள் மற்றும் வேலை செய்ய வேண்டிய காரணங்கள் ஆகியவற்றை ஆராய்ந்து தொழிலுக்கான கட்டுப்பாடுகளை விதிக்கின்றது.

அத்துடன் பராயம் அடையாத ஒரு பிள்ளையிடமான கொடுக்கல் – வாங்கல் என்பது தற்காலத்தில் நிலவி வருகின்ற மிகச் சிக்கலான விடயமாகும். இது தொடர்பான சட்ட ஏற்பாடானது மிகவும் கடினமானது.

சட்டம் சிறுவர்களுக்கு இழைக்கப்படும் குற்றச் செயல் ஒன்றை பராயமடைந்தோருக்கு எதிரான குற்றச் செயல்களை விட மிகவும் பாரதூரமானதாகவே பார்க்கின்றது.

அந்தவகையில் கொடுக்கல் – வாங்கல் எனும்போது சிறு பிள்ளைக்குக் கொடுக்கும் மிட்டாய் தொடக்கம் நகை வரைக்கும் எல்லாமே கொடுக்கல் – வாங்கலில் அடங்கி விடுகின்றது. ஆனால், இதற்கு சட்டரீதியாக வித்தியாசமான நடைமுறை இருக்கின்றது.

அதாவது அத்தியாவசியமான சூழ்நிலையில் மறுக்கப்பட முடியாத சில விடயங்களைக் கொடுக்கல் – வாங்கல்களைச்  செய்யலாமே தவிர அனைத்துக் கொடுக்கல் – வாங்கல்களையும் சட்டமானது அங்கீகரிக்கவில்லை. உதாரணமாக கல்வி, உணவு, உறையுள் மற்றும் உடை போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காகச் சில ஒப்பந்தங்களை அதுவும் பாதுகாவலர் இல்லாத நேரங்களில் செய்துகொள்ள முடியுமே தவிர ஆடம்பர தேவைகளை நிறைவேற்ற முடியாது. அதாவது நகை விற்பனை – வாங்கல், வாகனங்கள் விற்பனை – வாங்கல் மற்றும் சொத்துக்களைப் பரிமாற்றம் செய்தல் போன்ற அத்தியாவசியத்துக்கு அப்பாற்பட்ட விடயங்கள் என்றைக்குமே சட்டப் பாதுகாப்பு அற்றதாகும்.

இன்னும் சுருக்கமாகக் கூறின் உதவியளிக்கும் ஒப்பந்தங்கள் அதாவது பிள்ளைக்குத் தற்காலத்தில் உதவியளிக்கக்கூடிய அத்தியாவசியமான ஒப்பந்தங்களை மேற்கொள்ளலாமே தவிர உதவியளிக்காத ஒப்பந்தங்களை அல்லது எதிர்காலத்தில் உதவியளிக்கும் என எதிர்பார்க்கப்படும் ஒப்பந்தங்களைச் செய்ய முடியாது.

மேலும் பராயமடையாதவர்களுக்குச் சொத்துக்கள் கொடுத்தல் மற்றும் அவர்களிடமிருந்து சொத்துக்கள் பெறல் தொடர்பாக பாதுகாவலர்களைச் சாடியே சட்டம் நிற்கின்றது. அதாவது சிறுபராயத்தில் சொத்துக்களை விற்கவோ அல்லது வாங்கவோ முடியாது. இருந்தபோதிலும் விதிவிலக்காகப் பிள்ளையின் நன்மைக்காகச் செய்யப்படும் ஒரு விடயம் தொடர்பாக நீதிமன்றம் தலையிட்டு அதை ஆராய்ந்து பிள்ளையின் அதிகூடிய அக்கறையைக்  கருத்தில்கொண்டு சில விடயங்களுக்கு அனுமதி அளிக்கின்றது.

அதாவது சிறுபராயத்தில் ஒருவரின் சொத்தை விற்றுவிட்டு அதைவிடப் பெறுமதியான சொத்து ஒன்று வாங்குவது தொடர்பாக சொத்து விற்று பெறப்பட்ட பணத்தை நீதிமன்றக் கணக்கில் இட்டு மீண்டும் ஒரு சொத்து வாங்குவதாக அதை வாங்கி பிள்ளையின் பெயரிலேயே எழுதுதல் வேண்டும்.

இன்றைக்கு அதிகரித்து வரும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறையின் தீவிரத் தன்மையைக் குறைக்கவே இவ்வாறான கடுமையான நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளிலும் பிள்ளைகள் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான காரணம் பிள்ளைகள் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டு ஒருகட்டத்தில் அது சரி என எண்ணி அவர்களாகவே அதனைச் செய்ய முயலும்போது இவ்வாறு எண்ணிக்கை அதிகரிக்கின்றது. ஆகவேதான், சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறாது சரியான முறையில் வழிநடத்தப்படும்போது எதிர்காலத்தில் அவர்களும் அவ்வாறான குற்றங்களைச் செய்யாது நாட்டை சரியாக வழிநடத்துவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *