அதிகாரிகள் என்னை உல்லாசத்திற்கு அழைக்கிறார்கள் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்!

தூத்துக்குடியில் உயரதிகாரி பாலியல் தொல்லை கொடுத்ததாக ஊராட்சி ஒன்றிய அலுவலக பெண் பணியாளர் தீக்குளிக்க முயன்றதால் ஆட்சியர் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ஓட்டப்பிடாரம் தாலுகாவுக்கு உட்பட்ட பெரிய நத்தம் கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மனைவி ராமலட்சுமி (37). இவர், ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தற்காலிக கணினி ஆபரேட்டராக பணி செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று பிற்பகல் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த ராமலட்சுமி, மாவட்ட ஆட்சியரின் வாகனத்திற்கு அருகே திடீரென டீசலை தன்மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து ராமலட்சுமியின் மீது தண்ணீர் ஊற்றி அவரை தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து ராமலட்சுமி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கணினி ஆபரேட்டராக தற்காலிக பணி செய்து வருகிறேன். நான், பணியில் சேர்ந்த நாள் முதலே வட்டார வளர்ச்சி அலுவலரின் ஓட்டுனர் கனகராஜ் என்பவர் என்னிடம் தகராறு செய்து வந்தார். என்னை வேலையை நீக்குவதற்கு பல்வேறு சதிகளை செய்து எனக்கு தொந்தரவு கொடுத்தார். மேலும் உயரதிகாரிகள் மூலம் எனக்கு கூடுதல் பணிச்சுமை வழங்கி இரவு 9 மணி வரை வேலை வாங்கினார். இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் இப்ராஹிம் சுல்தான் என்பவரும் உடந்தையாக செயல்பட்டார்.

மேலும் அரசின் நலத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை அவர்கள் முறைகேடாக எனது வங்கிக் கணக்கிற்கு மாற்றி என்னை மிரட்டி எனது ஏ.டி.எம். கார்டு மூலமாக அந்த பணத்தை எடுத்து செலவு செய்து வந்தனர். தற்பொழுது என்னை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்ற உள் நோக்கத்திற்காக, நான் அரசு பணத்தை மோசடி செய்தது போல என் மீது வீண்பழி போடுகின்றனர். இதை எதிர்த்து கேட்டதற்கு, நிலைமையை சரிசெய்ய என்னை மிரட்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் இப்ராஹிம் சுல்தானும், அவரின் ஓட்டுநர் கனகராஜூம் உல்லாசத்திற்கு வரவேண்டுமென கட்டாயப்படுத்துகின்றனர்.

இதற்கு நான் உடன்பட மறுத்ததால் என்னிடம் எந்தவித விளக்கமும் கேட்காமல் பணியில் இருந்து நீக்கிவிட்டனர். இரண்டு குழந்தைகளை வைத்து பிழைப்பு நடத்தி வரும் எனக்கு இந்த வேலையை தவிர வேறெதுவும் தெரியாது. என்மீது விழுந்துள்ள பழியை நீக்குவதற்கும் வழிதெரியாமல் தான் இன்று தீக்குளிக்க முயன்றேன். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *