பாலிவுட்டில் கவனம் செலுத்தும் தென்னிந்திய நாயகிகள்!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் முத்திரைப் பதித்து, இப்போது பாலிவுட்டில் கவனம் செலுத்த தொடங்கியிருக்கும் நாயகிகள் குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம்.

இந்திய சினிமா அதன் தொடக்கத்தில் இருந்து கலாசார ரீதியாக வேறுபட்டது. பல்வேறு பின்னணியைச் சேர்ந்த நடிகர்கள் இந்திய சினிமாவின் வளர்ச்சியில் பங்காற்றியிருக்கிறார்கள். பல நேரங்களில் மொழி எல்லைகளைக் கடந்து நடிப்பவர்கள் ஒட்டுமொத்த இந்திய திரைத்துறைகளிலும் கோலோச்சுவார்கள். இது நாயகர்களுக்கு பொருந்துவதைவிட நாயகிகளுக்கே அதிகம் பொருந்துகிறது. இந்தியாவின் மிகப்பெரிய சினிமாத் துறையாக இருக்கும் பாலிவுட்டில் மொழி பாகுபாடு இல்லாத அளவுக்கு எண்ணற்ற கதாநாயகிகள் இருக்கின்றனர்.

தெற்கில் இருந்து குறிப்பிடத்தக்க நாயகிகள் பாலிவுட்டில் கோலோச்சி இருக்கிறார்கள். ஸ்ரீதேவி தொடங்கி அசின் வரை இந்தப் பட்டியல் ஏராளம். வைஜெயந்திமாலாதான் முதன்முதலில் தெற்கில் இருந்து சென்ற முதல் நடிகை. இதனைத்தொடர்ந்து வஹீதா ரஹ்மான். இருவரும் அப்போது தங்கள் நடனத்தால் பாலிவுட் திரையுலகை ஆண்டார்கள். அவர்கள் வரிசையில் ஹேமா மாலினி, ரேகா, ஸ்ரீதேவி போன்றோர் தெற்கில் இருந்து சென்றனர். இதில் ஸ்ரீதேவி இந்தியாவின் முதல் லேடி சூப்பர்ஸ்டாராக இந்தி ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.

இப்போது நீண்ட காலத்துக்குப் பிறகு இந்தி சினிமாவில் தென்னிந்திய நடிகைகளுக்கு நல்ல மார்க்கெட் உருவாகியுள்ளது. இதனால் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற தென்னிந்திய சினிமாவில் முத்திரை பதித்த நடிகைகள் சிலர் இப்போது பாலிவுட்டில் கவனம் செலுத்த தொடங்கியிருக்கின்றனர்.

நயன்தாரா: தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. மலையாளத்தில் முதல்முறையாக நடிகையாக அறிமுகமான நயன்தாராவுக்கு தமிழ் ரசிகர்கள் சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்தனர். இதுவரை எண்ணற்ற வெற்றிப் படங்களில் நடித்துள்ள நயன்தாரா தமிழ், தெலுங்கு என தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்கள் முக்கால்வாசி பேருடன் நடித்து முடித்துவிட்டார். தற்போது இந்திக்கு சென்றுள்ளார். ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கும் ‘லயன்’ படத்துக்கு நயன்தான் ஹீரோயின். கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேலாக தனது அழகால், நடிப்பால் தென்னிந்திய சினிமாவை கட்டிப்போட்ட நயனின் பாலிவுட் என்ட்ரி எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

சமந்தா: ‘நான் ஈ’ போன்ற சில தெலுங்கு டப்பிங் படங்களால் இந்தி ரசிகர்களுக்கு சமந்தா பரிச்சயமான முகமாக இருந்தாலும். ‘தி ஃபேமிலி மேன்’ வெப் சீரிஸ் அவருக்கு இந்தி சினிமாவில் நல்ல ஓர் அறிமுகத்தை கொடுத்தது. இந்த அறிமுகம் பாலிவுட் ஹீரோக்கள் மத்தியிலும் நல்ல மதிப்பை சமந்தாவுக்கு ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. இதனால், அடுத்து இந்தி படங்களில் நடிக்க முயன்று வருகின்றார். சமீபத்தில் பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் போன்றோர் சமந்தா உடன் நடிக்க வெளிப்படையாக விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் ‘தி ஃபேமிலி மேன்’ இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே தங்களது அடுத்த கதைக்கு சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். விரைவில் அவர்களின் அடுத்த திட்டத்தில் சமந்தா இணைவார் என சொல்லப்படுகிறது. அது நடக்கும் பட்சத்தில் சமந்தாவின் நேரடி இந்தி படமாக அமையும்.

நித்யா மேனன்: தமிழில் ‘180’, ‘வெப்பம்’, ‘மாலினி 22 பாளையங்கோட்டை’, ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’, ‘காஞ்சனா 2’, ‘ஓ காதல் கண்மணி’, ‘மெர்சல்’ உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் மலையாள நடிகை நித்யா மேனன். இவர் கன்னடம், தெலுங்கு படங்களிலும் நடித்துவருகிறார். இவர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘த அயர்ன் லேடி’, தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படங்களில் நடித்துவருகிறார். பன்மொழிகளில் நடிப்பதை விரும்பும் நித்யா மேனன் தமிழ், தெலுங்கு, மலையாளம் முன்னணி நடிகையாக இருந்தாலும் இந்தியிலும் கிடைக்கும் வாய்ப்பை ஏற்று நடித்து வருகிறார்.

அக்‌ஷய், வித்யா பாலன் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்த ‘மிஷன் மங்கள்’ படத்தில் நடித்தவர், அபிஷேக் பச்சன் பிரதான கதாபாத்திரத்தில் நடித்த ‘ப்ரீத்: இன்டு தி ஷேடோஸ்’ வெப் சீரிஸில் நடித்து பாராட்டுகளை பெற்றார். தொடர்ந்து பாலிவுட்டில் வாய்ப்புகளை பெற்றுவருகிறார். இவர்களை போல, மற்றொரு மலையாள நடிகையான பார்வதி திருவோத்துவும் ஒரு இந்தி படத்தில் நடித்து பாராட்டுகளை பெற்றார். ராஷ்மிகா மந்தனா அமிதாப் பச்சனுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

பிரியாமணி: தென்னிந்தியாவில் இருந்து தற்போது பாலிவுட் சென்ற நடிகைகளில் முக்கியமானவர் பிரியாமணி. தான் ஹீரோயினாக நடித்த காலகட்டத்தில், பாலிவுட்டில் நேரடி இந்தி படங்களில் நடிக்காவிட்டாலும், மணிரத்தினத்தின் ‘ராவணன்’ படத்தில் உறுதுணை நடிகையாக அறிமுகமானார். அடுத்து ராம்கோபால் வர்மாவின் ‘ரத்த சரித்திரம்’. இது அறிமுகத்தை கொடுத்தாலும், ஷாருக்கானின் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தின் ஒற்றைப் பாடல் இவரை பாலிவுட்டில் ஹிட் அடிக்க வைத்தது.

ஆனால், `தி பேமிலி மேன்’ “ஹிஸ் ஸ்டோரி’ போன்ற வெப் சீரிஸ்கள் பிரியாமணிக்கு புதிய வாய்ப்புகளை பாலிவுட்டில் ஏற்படுத்தி கொடுத்துள்ளன. `தி ஃபேமிலி மேன்’ இரண்டு பாகங்களிலும் பிரியாமணியின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டுள்ளது. தற்போது ஷாருக்கான் – நயன்தாராவின் படம் மற்றும் அஜய் தேவ்கனின் ‘மைதான்’ முதலான படங்களில் நடித்து வருகிறார்.

மேலே சொன்னவர்கள் அனைவரும் தென்னிந்தியாவை பூர்விகமாக கொண்டவர்கள். இவர்கள் தவிர, தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகிய வட இந்தியாவை பூர்விகமாக கொண்ட பூஜா ஹெக்டே, தமன்னா, ராக்‌ஷி கண்ணா, ரகுல் பிரீத் சிங் போன்றோரும் பல இந்தி படங்களில் நடித்து வருகிறார்கள். அதிலும் தமன்னா, ரகுல் பிரீத் சிங், பூஜா ஹெக்டே போன்றோர் முன்னணி நடிகர்களுடன் நாயகியாக வலம் வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *