சீனாவில் கடும் வெள்ளத்தால் 20 இலட்சம் மக்கள் இடம்பெயா்வு!

சீனாவின் வடக்கு ஷாங்க்சி மாகாணத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் கிட்டத்தட்ட 20 இலட்சம் வரையான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

கடந்த வாரம் பெய்த பலத்த மழையால் இந்த மாகாணத்தில் 70 க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் மற்றும் நகரங்களில் வீடுகள் இடிந்தும் மண்சரிந்தும் கடுமையான சேதம் ஏற்பட்டது.

மழை தொடர்ந்து பெய்து வருவதால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹெனான் மாகாணத்தில் தீவிர மழை பெய்து 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த மூன்று மாதங்களுக்குள் மீண்டும் ஒரு துயரத்தை சீனா சந்தித்துள்ளது.

ஷாங்க்சி மாகாணம் முழுவதும் 17,000 வீடுகள் இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிலச்சரிவில் சிக்கி நான்கு பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துவிட்டதாக சீன அரச ஊடகமான குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

ஷாங்க்சி நிலக்கரி உற்பத்தியில் மிக முக்கிய பங்காற்றும் மாகாணமாகும். கடும் மழையின் விளைவாக இங்கு சுரங்கங்கள் மற்றும் இரசாயன தொழிற்சாலைகளின் செயற்பாடுகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சீனா ஏற்கனவே மின் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது, இதனால் மின்பற்றாக்குறை ஏற்பட்டு மின்வெட்டை அமுல் செய்யவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாகாணத்தில் உள்ள 60 நிலக்கரி சுரங்கங்கள், 372 நிலக்கரி அல்லாத சுரங்கங்கள் மற்றும் 14 இரசாயன தொழிற்சாலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக மாகாண அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *