யார் இந்த இலங்கைப் பெண் யோஹானி?ஒரே பாடலில் நாயகியான அதிசயம்!

இலங்கையைச் சேர்ந்த இளம்பெண் யோஹானி பாடியுள்ள ‘மணிகே மாகே ஹிதே’ என்னும் சிங்கள பாடல் 140 மில்லியன் பார்வைகளைக் கடந்துச் சென்றுகொண்டிருக்கிறது.

இந்த ஒரே பாடலில் இந்தியர்களின் மனதில் வைரல் நாயகியாக பதிந்திருக்கும் பாடகி யோஹானி யார் என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.

இன்ஸ்டாகிராம் ரீல், ஃபேஸ்புக் ரீல், யூடியூப் என வலைத்தளங்கள் பலவற்றிலும் சமீப நாட்களில் நாம் அதிகம் பார்த்திருக்கும் பாடல் ‘மணிகே மாகே ஹிதே’ தான். அந்த அளவுக்கு இந்தப் பாடல் இந்தியர்கள் மத்தியில் வைரலாக இருந்துவருகிறது..

பாலிவுட்டின் ‘பிக்’ பி அமிதாப் பச்சன் இந்தப் பாடலை தனது பழைய நடனங்களுக்கு ஏற்ப மிக்ஸ் செய்து வெளியிட, அதன்பிறகு இந்தியா முழுவதும் பிரபலமானது.

தற்போது வரை 140 மில்லியன் பார்வைகளைக் கடந்துச் சென்றுகொண்டிருக்கிறது ‘மணிகே மாகே ஹிதே’ பாடல்.

இவ்வளவு பெரிய வைரல் பாடலுக்கு பின்புலமாக இருக்கும் பாடகி 28 வயதான இலங்கைப் பெண் இசைக் கலைஞர் யோஹானி.

யார் இந்த யோஹானி? அவர் கடந்து வந்த பாதை குறித்து பார்க்கலாம்…

யோஹானியின் சொந்த நாடு இலங்கை. யோஹானி டி சில்வா என்ற முழுப்பெயர் கொண்ட யோஹானி கொழும்புவை பூர்விகமாகக் கொண்டவர்.

யோஹானியின் தந்தை ஒரு முன்னாள் ராணுவ வீரர். அவரது தாய் ஒரு விமான பணிப் பெண்.

இலங்கையில் தனது பள்ளிப்படிப்பை முடித்த யோஹானி, பள்ளியில் படிக்கும்போதே படுசுட்டியாம். அப்போதே நீச்சல், வாட்டர் வாலிபால் என சிறந்து விளங்கியவர் இசைமீது பெரிய ஆர்வம் காட்டவில்லை.

ஆனால், கல்லூரிப் படிப்பை லண்டனில் படித்தபோதுதான் யோஹானிக்கு இசைமீது ஆர்வம் அதிகரிக்க, அங்கே தனது இசைத்திறனை வளர்த்துள்ளார்.

கல்லூரி படிக்கும்போதே தனக்கென வெப்சைட் உருவாக்கிய யோஹானி, அதில் தான் இசையமைக்கும் பாடல்களை பதிவேற்றுவதை வழக்கமாக்கிக்கொண்டுள்ளார்.

ஆரம்பத்தில் சிங்கள ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையிலான பாடல்களை மட்டும் பதிவேற்றி வந்துள்ளார். சிங்களர்கள் மத்தியில் ஓரளவு அறிமுகத்துடன் வெளிநாடுகளில் தனது படிப்பை முடித்து நாடு திரும்பியவர்.

இலங்கையில் இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பாடுவதுடன், தனியார் நிறுவங்களுடன் இணைந்து இசை ஆல்பங்களையும் உருவாக்கி வந்துள்ளார்.

சில காலம் முன் யோஹானி இசையில் உருவான ‘ஆயே’ ஆல்பம் அங்கு பெரிய ஹிட். இந்த ஆல்பம் அவரின் இசை வாழ்க்கையை பற்றி ஒன்று.

இதேபோல் 2020-ல் வெளியிட்ட இவரின் ‘கிறிஸ்மஸ் பேபி’ ஆல்பமும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த சமயத்தில்தான் தெருக்குரல் அறிவின் ‘குக்கூ’ ஆல்பத்தையும் தனது ஸ்டைலில் யோஹானி பாடி வெளியிட, தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் ஓரளவு அறிமுகமானார்.

இதையடுத்து ‘மணிகே மாகே ஹிதே’ பாடல் ஹிட் அடிக்க, ஓவர் நைட்டில் இந்தியா, இலங்கை ரசிகர்கள் மனதில் பெரிய இடத்தை பிடித்திருக்கிறார் யோஹானி.

‘மணிகே மாகே ஹிதே’ பாடலின் இசையும் பாடலை அவர் பாடிய விதமும் ரசிகர்களை அவரை கொண்டாட வைத்திருக்கிறது. இந்தப் பாடலின் ரீச் காரணமாக இப்போது பாலிவுட்டில் ஒரு படத்தில் பாடல் ஒன்றையும் பாடும் வாய்ப்பு யோஹானிக்கு கிடைத்திருக்கிறது. விரைவில் அந்தப் பாடலும் வெளியாக இருக்கிறது.

சிங்களர்களின் சினிமா கலாசாரத்தில் இந்தியாவின் பாலிவுட் மற்றும் தமிழ் சினிமா தாக்கம் இருக்கும். அது, யோஹானிக்கும் இருந்தது. பாலிவுட் இசை மற்றும் தமிழ்ப் படங்கள் இசையை கேட்பது அவருக்கு பிடித்தமான ஒன்றாக இருந்துள்ளது.

தமிழில் சிம்பு நடிப்பில் வெளியான ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் ரஹ்மானின் `ஹோசனா’ பாடல் யோஹானிக்கு மிகவும் பிடித்த ஒரு பாடல் என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *