புனிதமானது மகவேற்பு! 

– பஸ்றி ஸீ. ஹனியா
LL.B (Jaffna)

‘மகவேற்பு’ என்ற சொல் புதிதாக இருந்தபோதிலும் நடைமுறையில் இருக்கும் பாரியதொரு புனிதமான செயலாகும்.

பொருள்பட கூறுகையில் தத்தெடுத்தல் அதிலும் பிள்ளை ஒன்றைப் பெற்றோர் தத்தெடுத்தல் என்று விளக்கலாம். மேலும், பெற்றோர் – பிள்ளை ஆகியோருக்கிடையில் செயற்கை பொறிமுறையின் ஊடாக உறவு முறை ஒன்றை  உருவாக்குதல் என்று எளிய முறையில் பொருள்படும்.

மகவேற்பு சட்டரீதியானதாகச் செய்யப்படும்போது இயற்கை பெற்றோரிடமிருந்து ஒரு பிள்ளைக்குக் கிடைக்கின்ற அனைத்து உரிமைகளையும் மகவேற்கும் பிள்ளைக்குப் பெற்றுக்கொள்வதற்கு வழிசமைக்கின்றது.

இது தொடர்பாக இலங்கை சட்டம் பற்றிய புரிதல் அத்தியாவசியமாகின்றது.

அந்தவகையிலே மகவேற்பு கட்டளைச்சட்டம் உருவாக்கப்பட்டு பிள்ளைகளின் தத்தெடுப்பு தொடர்பான நெறிமுறைகள் எமது நாட்டில் பின்பற்றப்பட்டுக் கொண்டு வருகின்றன.

பொதுச் சட்டத்தின் கீழான மகவேற்பு,  ஆள்சார் சட்டத்தின் கீழான மகவேற்பும் காணப்படுகின்றன.

கட்டளைச் சட்டத்தின் அடிப்படையில் 14 வயதுக்குக் குறைந்த ஒரு பிள்ளையை மாத்திரமே மகவேற்பு செய்யலாம் என்பதுடன் 10 வயதுக்கு மேற்பட்ட பிள்ளையை மகவேற்பு செய்யும்போது அப்பிள்ளையின் சம்மதம் அத்தியாவசியமாகக் கருதப்படுகின்றது.

பிள்ளையின் பாதுகாப்பை உறுதி செய்யப் பெற்றோர் தொடர்பாக சில தேவைபாடுகளையும் சட்டம் கொண்டுள்ளது.

தம்பதிகள் பெண், ஆண் குழந்தையை மகவேற்பு செய்யலாம். ஆனால், அவ்வாறு மகவேற்கும் பெற்றோர் 25 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் அவசியமாகும்.

அதேவேளை, பெற்றோருக்கும் மகவேற்கப்படும் பிள்ளைக்கும் இடையிலான வயது வித்தியாசம் 21 விட அதிகமாக இருத்தல் வேண்டும். இந்த வயது வித்தியாசமானது பெற்றோரால் பிள்ளைகளைப் பாதுகாக்க முடியும் என்பதை உறுதிப்படுத்துவதற்காக இந்தச் சட்டங்கள் ஆக்கப்பட்டுள்ளன.

தடுக்கப்பட்ட திருமணங்களுக்குள் மகவேற்பு செய்யப்படும் பிள்ளைக்கும் பெற்றோருக்கும் இடையிலான திருமணம் தடுக்கப்பட்டு, பாலியல் ரீதியான உறவுகளும் குற்றவியல் குற்றமாகக் கருதப்படுகின்றன.

இந்தச் சட்டத்துக்கான காரணம் மகவேற்கப்படும் பிள்ளைகள் பாலியல் ரீதியான துன்புறுத்தலில் இருந்து விடுபடுதல் மற்றும் ஏனைய பாதகங்களில் இருந்தும் பாதுகாத்தல் ஆகும்.

இந்த 21 வருட வயது வித்தியாசமானது உறவு முறைகளுக்குள் மகவேற்பு செய்யப்படும்போது அதாவது சகோதரன், சகோதரி, மாமன், மாமி ஆகியோரின் பிள்ளையை மகவேற்பு செய்யப்படும்போது இந்த வயது வித்தியாசம் கணக்கில் எடுக்கப்படாது.

மேலும் மகவேற்பு செய்ய முனையும் விண்ணப்பதாரி ஆணாக இருக்குமிடத்து பெண் பிள்ளையை  மகவேற்பு செய்வதற்குச் சட்டத்தில் இடம் கிடையாது. இதுவும் பிள்ளைகளின் பாலியல் ரீதியான சுரண்டலைத் தடுப்பதாகவே அமைகின்றது.

இதற்கு அப்பால் ஆண் ஒருவருக்கு சட்டரீதியற்ற முறையில் பிறந்த பெண் பிள்ளை ஒன்றை மகவேற்க சந்தர்ப்பமும் இருக்கின்றது.

ஒரு குழந்தையைப் பெற்றோர் தத்தெடுத்தல் என்பது இலகுவான விடயமல்ல. இங்கு பெற்றோர், பிள்ளையின் பொறுப்பை விட சட்டத்துக்குப் பெரும் பங்கு காணப்படுகின்றது. ஏனெனில் ஆதரவற்றோர் இல்லத்தில் இருக்கும் பிள்ளை ஒன்றை பிள்ளையின் நலனுக்காக இன்னொருவருடன் அனுப்பி அங்கு அது துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகும் நிலையானது மிகவும் வருந்தத்தக்கதாகும்.

அவ்வாறான ஒரு நிலை வந்துவிடக் கூடாது என்பதற்காகவே இவ்வாறான கடினமான ஏற்பாடுகள் சட்டத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் திருமணம் முடித்த ஒரு நபர் ஒரு குழந்தையைத் துணையின் சம்மதமின்றி மகவேற்பு செய்ய முடியாது என்ற சட்டமும் இருக்கின்றது. இங்கு திருமணப் பந்தத்தில் இருப்போர் ஒரு வாழ்க்கைத்துணையின் சம்மதமின்றி பிள்ளை ஒன்றைத் தத்தெடுக்கும்போது அப்பிள்ளைக்குத் துஷ்பிரயோகங்கள் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன எனக் கருதப்படுகின்றன.

ஆகவேதான் இங்கு சம்மதம் என்ற விடயமும் அதிலும் பத்து வயதுக்கு மேற்பட்ட பிள்ளை என்றால் பிள்ளையின் சம்மதமும், பெற்றோர் இருவருடைய சம்மதமும் அவசியமாகின்றது. இருந்தபோதிலும் வாழ்க்கைத்துணை இழந்தவர்கள் அல்லது திருமண முறிவில் இருப்பவர்களுக்கும் நீதிமன்றமானது தனது தன்மதி அதிகாரத்தில் அவர்களுக்குக் குழந்தையைக் கொடுப்பதா? இல்லையா? என்ற முடிவுக்கு வருகின்றது.

மேலும் சம்மதம் என்ற விடயத்தில் பிள்ளையின் சம்மதத்துக்கு அப்பால் பிள்ளையினுடைய பாதுகாவலர்கள் அல்லது பெற்றோர் அல்லது பிள்ளையைக் கட்டுக்காவலில் வைத்திருப்போர்களுடைய சம்மதம் மிக முக்கியமாகின்றது.

வெளிநாட்டில் இருப்பவர்கள் இலங்கையில் இருக்கும் ஒரு பிள்ளையை மகவேற்பு செய்வதற்கான நடவடிக்கை முறையானது மிகவும் இறுக்கமானதாகக் காணப்படுகின்றது. ஆரம்ப காலங்களில் அவ்வாறு வெளிநாட்டில் இருக்கும் தம்பதியினர் பிள்ளை ஒன்றைத் தத்தெடுக்க முடியாது என்ற கோட்பாட்டில் இருந்தபோதிலும் நிகழ்காலத்தில் பிள்ளைகளின் நலன் கருதி சில விதிமுறைகளுடன் மகவேற்பு செய்வதற்குச் சில அனுமதிகள் வழங்கப்படுகின்றன.

மகவேற்பு ஒன்றைச் செய்வதற்கான நடவடிக்கையை நோக்குவோமானால் மாவட்ட நீதிமன்றங்கள் பிள்ளையினுடைய உயர் பாதுகாவலனாகக் காணப்படும் என்ற வகையில் மகவேற்பு தொடர்பான விடயங்களை மாவட்ட நீதிமன்றங்கள் கண்காணிக்கின்றன. இந்த வழக்குகள் இரகசியமான முறையில் பொதுமக்கள் பார்வைக்கு விடப்படாது நடத்தப்படுகின்றன.

மகவேற்கப்படும் பிள்ளை ஒன்றும் சட்டரீதியாகப் பிறந்த பிள்ளை அனுபவிக்கும்  அனைத்து அந்தஸ்துகளையும்  பெறும். மேலும் இவ்வாறு நிரந்தரமாகும் இடத்தில் மகவேற்கப்படும் பிள்ளையின் இயற்கை தந்தை – தாய்க்கு  இருக்கும் உரிமைகள் இல்லாதொழிக்கப்படுகின்றன.

ஆள்சார் சட்டமான கண்டியன் சட்டமானது சற்று வித்தியாசமான நடைமுறையைப் பின்பற்றி வருகின்றது. அதேவேளை, முஸ்லிம் சட்டமானது எந்த இடத்திலும் தத்தெடுக்கப்பட்ட பிள்ளை ஒன்று இயற்கை பிள்ளை ஆகாது என்ற வாதத்தையும் முன்வைக்கின்றது.

எது எதுவாக இருந்தபோதிலும் தத்தெடுத்தல் என்ற விடயம் மிகப் புனிதமான விடயமாகும். இன்றைக்குப் பிள்ளை இல்லாத எத்தனையோ பெற்றோர்கள் வைத்தியசாலையின் எல்லாத் திசைகளிலும் அலைந்து கொண்டே இருக்கின்றார்கள். மறுபுறம் ஆதரவற்ற குழந்தைகளும் கைவிடப்பட்ட குழந்தைகளும் தங்களுக்குப் பெற்றோர் கிடைக்காதா? என ஏங்கிக்கொண்டிருக்கின்றார்கள்.

இரத்த உறவான சகோதர – சகோதரிகளைவிட வாழ்க்கைத் துணை மீது பல வேளைகளில் பாசம் அதிகரித்து விடுகின்றது. ஆகவேதான் பாசம் கொடுப்பதற்கு இரத்த உறவாகத்தான் இருக்க வேண்டியதில்லை. செயற்கை உறவு கூட சிறந்த உறவாக மாறலாம். ஆகவே, எதிர்கால சந்ததிகளைக் காப்பாற்ற வேண்டிய கடப்பாடு அவர்களைத்  தத்தெடுப்பது மட்டுமல்லாமல் அவர்களுக்குச் சிறந்த சூழல் வழங்குவதிலும் இருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *