எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் பாடசாலைகள் ஆரம்பம்?

எதிர்வரும் நவம்பர் மாதம் ஆரம்பத்தில் இருந்து அனைத்து தரங்களுக்குமான பாடசாலைகளையும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி சீர்திருத்த இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் நேற்று (08) தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே எழுப்பிய வாய்மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், க.பொ.த உயர்தரப் பரீட்சை வினாத்தாளின் தரத்தை எந்த விதத்திலும் மாற்றி அமைப்பதற்கு ஒரு போதும் நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது. அதற்கு பதிலாக மாணவர்களுக்கு பாடத்தை உள்ளடக்கி பரீட்சைக்கு தயாராவதற்கு கூடுதல் நேரம் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், பாடசாலை நாட்காட்டியில் வருடத்திற்கு 210 நாட்கள் பாடசாலைகள் நடத்தப்பட்ட போதிலும், 2020 ஆம் ஆண்டில் 65 நாட்கள் மட்டுமே பாடசாலைகளை நடத்த முடிந்தது. 2021 ஆம் ஆண்டில் மேல் மாகாணத்திலுள்ள மாணவர்களுக்காக 5 நாட்கள் மாத்திரமே பாடசாலைகள் நடத்தப்பட்டன என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, தற்போது பாடசாலைகளில் பாடத்திட்டங்கள் எந்த அளவுக்கு முடிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து மாகாண மட்டத்தில் மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *